Jul 12

எங்கள் செல்ல நாய் கிடைக்காமல் ஊருக்கு போகமாட்டோம்! -ஜெர்மன் தம்பதி

மெரினா கடற்கரைக்கு வந்தபோது தங்களது நாயை தொலைத்த ஜெர்மன் தம்பதி, அந்த நாயை மீட்டுத் தரக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தத்தோடு 'எங்கள் செல்ல நாய் கிடைக்காமல் நாங்கள் ஊருக்கு போகமாட்டோம்' என்றனர்.   

ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டெபன் காக்ரா, தனது மனைவியுடனும் தனது செல்லப் பிராணியான லூக் என்கிற நாயுடன் ஜெர்மனியிலிருந்து தங்களது காரிலேயே இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். 

சென்னையை சுற்றிப் பார்க்க வந்த தம்பதியினர் மெரினா கடற்கரைக்குச் சென்றனர். அப்போது காரின் வெளிப்புறம் கட்டி வைக்கப்பட்டிருந்த அவர்களின் செல்ல நாய் மாயமானது. எங்கு தேடியும் தங்களது செல்லப்பிராணி ‘லூக்’ கிடைக்காததால் ஸ்டெபன் காக்ரா, மெரினா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். 

மேலும் அவர்கள் கூறும்போது, பாம்பு ஒன்றிடமிருந்து தங்களின் உயிரைக் காப்பாற்றிய செல்ல நாய் அது என்றும் எங்கள் நாயை கண்டுப் பிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்குவோம் எனவும்  விளம்பரம் செய்துள்ளனர்.

இதனிடையே,  நாய் ‘லூக்’கை கண்டுபிடிக்க 'வாட்சப்' குரூப் ஒன்றையும் ஜெர்மனி தம்பதியினர் தொடங்கியுள்ளனர். மெரினா கடற்கரையிலிருந்து ஆட்டோ ஒன்றில் லூக் கடத்திச் செல்லப்பட்டதாக வாட்ஸ் அப் குரூப்புக்கு ஒருவர் தகவல் கொடுத்துள்ளதாகவும் மெரினா போலீசாரிடம் ஜெர்மனி தம்பதியினர் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். 

நாயை பறிகொடுத்த சோகத்தில் ஜெர்மன் தம்பதிகளின் நிலையை கேள்விப்பட்ட வலைதளவாசிகள் அனைவரிடமும் இந்த செய்தியை பகிர்ந்து நாயை கண்டுபிடிக்க உதவி வருகின்றனர்.