Jul 12

ரொரன்ரோ ஐலன்ட் மீண்டும் திறக்கப்படுமா?

வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட ரொரன்ரோ ஐலன்ட் இந்த மாத இறுதியில் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், சில பகுதிகள் இந்த கோடை காலத்தின் போதும் தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றில் இதனைத் தெரிவித்து்ளள ரொரன்ரோ நகர நிர்வாகம், Gibraltar Point, Hanlan’s Beach, Olympic Island மற்றும் Centre Islandஇன் ஒரு பகுதி என்பன தொடர்ந்தும் மூடப்பட்டே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை அடுத்து ரொரன்ரோ ஐலன்டுக்கான படகுப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டதுடன், அங்கு குடியிருப்போரைத் தவிர வெளியாட்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யூலை 31ஆம் நாள் வரையில் அங்கு இடம்பெற ஏற்பாடாகியிருந்த அனைத்து நிகழ்வுகள், சுற்றுலா பயணங்களும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு வெள்ள நீர் வடிந்துள்ள போதிலும், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு நீர் வடிதல் வேகமாக இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

அங்கு வெள்ள நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில், தற்போது அதனை விடவும் சுமார் 30 சென்ரிமீட்டர் உயரத்துக்கு நீர்மட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ரொரன்ரொ ஐலன்ட்டில் ஏற்பட்டுள்ள இந்த நீர் ஏற்றமானது, முன்னர் எப்போதும் ஏற்பட்டிருக்காத சம்பவம் என்ற ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறியும் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.