Jul 12

கனேடியக் குடியுரிமைப் பரீட்சையில் தோல்வி அடையும் அதிகளவான பெண்கள்

தகவல் அறியும் சட்டமூலத்தின் உதவியுடன்  பெறப்பட்ட தகவல்களின்படி கனேடியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களில் ஆண்களை விட பெண்களின் விண்ணப்பங்களே அதிகளவில் நிராகரிக்கப்படுவதாகவும், ஆங்கில மொழித் தேர்ச்சியில்லாமையே இதற்குப் பிரதான காரணமாக அமைவதாகவும் அறியவந்துள்ளது.

முன்னைய பழமைவாத அரசினால் அறிமுகம் செய்யப்பட்ட குடியுரிமை தொடர்பான இறுக்கமான சில சட்டங்களை லிபரல் அரசு அண்மையில் தளர்த்தியுள்ளது. ஆயினும் பெண்கள் கனேடியக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு உள்ள தடைகளை நீக்குவதில் லிபரல் அரசு தவறியுள்ளது என விமர்சகர்கள்  தெரிவிக்கின்றனர்.

2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரைக்கும் 56,000 இற்கும் அதிகமானோரின் குடியுரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவர்களுள் பெரும்பாலானோர்களின் விண்ணப்பங்கள்ஆங்கில மொழித் தேர்ச்சி இல்லாமை காரணமாகவே நிராகரிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

முன்னைய பழமைவாத அரசு குடியுரிமைப் பரீட்சைக்கான சித்திப் புள்ளியை அதிகரித்ததாலும், குடியுரிமை விண்ணப்பத்திற்கான கட்டணத்தை $ 100 இலிருந்து   $ 530 ஆக அதிகரித்ததாலும் அகதிக்கோரிக்கையாளர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகினர்.

அகதிகளாகக் கனடாவினுள் வந்து, பின்பு கனேடியக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை2005-2009 காலப்பகுதியை விட 2010-2015 காலப்பகுதியில் 25 % ஆல் குறைவடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.