Mar 25

இரண்டு வாரங்களில் ஜனாதிபதி முக்கிய தீர்மானங்கள்

அரசியல், பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சில தீர்மானங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் எடுப்பார் எனவும், இதனை அவர் பகிரங்கமாக அறிவிப்பார் எனவும்  நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். 

நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாம் கடந்து வந்த காலம் குறித்து சிந்தித்துப் பார்க்கின்றபோது ஜனநாயகத்தை வலுப்படுத்தி கருத்துச் சுதந்திரம் பூரணமாகப் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்ததை சகலரும் அறிவர். அதனைத்  தவறாகப் பயன்படுத்திய சந்தர்ப்பங்களும் இருந்தன.

நாட்டின் பொருளாதார நிலைமையைப் பார்க்கின்றபோது மகிழ்ச்சியடைய முடியாத நிலைமை உள்ளது. ஏற்றுமதி வருமானத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது. அரச செலவுகளும் அதிகரித்துள்ளன.

அரசின் வருமானம்  அதிகரித்து வருவதற்கு நிகராக செலவீனங்களும் அதிகரித்து வருவதால் நெருக்கடியான நிலைமைக்கு நாம் முகம்கொடுக்க நேரிடும். அதற்காக வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்து ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரசின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல், பொருளாதார ரீதியில் ஜனாதிபதி சில முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளார். அதனை அவர் பகிரங்கமாக அறிவிப்பார்.

எதிர்வரும் 4 வருடங்களுக்குள் நாட்டை வலுவான முறையில் முன்னெடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டே மேற்படி தீர்மானங்களை ஜனாதிபதி எடுக்கவுள்ளார். 

இது அரசியல் ரீதியான தீர்மானம் மட்டுமன்றி நாட்டுக்கான தீர்மானமாகும். நாட்டின் பொருளாதாரத்தை சரியான திசையில் முன்னெடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தில் சிறிதளவு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றார்.