Apr 26

தந்தையின் நினைவில் உயிர்நீத்தோருக்கு யாழ்.மாநகர முதல்வர் அஞ்சலி!

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் மாமனிதர் தந்தை செல்வநாயகம் அவர்களின் 42 ஆவது நினைவு தினம் இன்று (26) யாழ்ப்பாணம் நூலகத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் நினைவுச் சதுக்கத்தில் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

மாமனிதர் தந்தை செல்வநாயகம் அவர்களின் 42 ஆவது நினைவு தின அனுஸ்டிப்புடன் கடந்த 21ஆம் திகதி நாட்டில் நடைபெற்ற அசாதாரண நிலை குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டிக்கும் வகையில் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி உரை ஒன்றினையும் நிகழ்த்தியிருந்தார்.

இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ மாவை சோ. சேனாதிராசா அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ த. சித்தார்த்தன், கௌரவ ஈ சரவணபவன், வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் அவர்கள், முன்னால் வட மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.