Jul 11

கிரென்பெல் தீ விபத்தில் 80 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்: பொலிஸார்

மேற்கு லண்டனில் உள்ள கிரென்பெல் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80ஆகவே தொடர்ந்து நீடிப்பதாக லண்டன் பெருநகர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாரும், தடயவியல் நிபுணர்களும் குறித்த பகுதியில் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் பெருநகர் பொலிஸ் தளபதி நேற்று (திங்கட்கிழமை) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், குறித்த குடியிருப்பு கட்டடத்தில் சுமார் 350 பேர்வரை வசித்து வந்த நிலையில், அவர்களுள் 255 பேர் வரையானோர் தீ அனர்த்தத்தின்போது பாதுகாப்பாக தப்பித்து வெளியேறியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதேவேளை, 14 பேர் அனர்த்தம் நேர்ந்த தினத்தன்று குடியிருப்பில் தங்கியிருக்கவில்லை என்றும் கூறினார்.

விபத்திற்குள்ளான குடியிருப்பு கட்டடத்திலிருந்து அடையாளம் காணக்கூடிய மனித எச்சங்கள் பொலிஸாரினால் அகற்றப்பட்ட நிலையில், தற்போது சிறப்பு தடயவியல் நிபுணர்கள் தேடுதல் பணிகளை தொடர்ந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.