Apr 25

யாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது!


யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு  கைதுசெய்யப்பட்டவர்களில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரும் முஸ்லிம் இளைஞர் ஒருவரும் மற்றும் தமிழ் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

யாழ். பொலிஸாருக்கு நேற்று தொலைபேசி அழைப்பு ஒன்றின் ஊடாக, நல்லூர் பின் வீதியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் சந்தேகிக்கப்படும் வகையில் நடமாடுபவர்கள் குறித்து தகவல் வழங்கப்பட்டிருந்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகிக்கப்படும் வகையில் அங்கு நீண்டநேரமாக நடமாடியவர்களை விசாரணை செய்துள்ளனர்.

இதன்போது, குறித்த 3 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளனர். இதனால் பொலிஸார் அவர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பறிமுதல் செய்ததுடன்,  பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

யாழ். தலைமை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்ணான்டோ முன்னிலையில் முற்படுத்தப்பட்ட 3 பேரும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்விசாரணையில் ஒருவர் வெளிமாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் என்பது தெரியவந்தது. அவர் தொழில் நிமிர்த்தம் யாழ்ப்பாணத்திற்கு வந்தாகவும் தெரிவித்தார். மூவரில் மற்ருமொருவர் தமிழ் பெண் என்றும், சாட்டிப் பகுதியில் உள்ள ஒரு குரு பீடத்தில் பணிபுரிபவர் என்றும் தெரியவந்தது.

அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர் சுற்றுலா நோக்கத்துடன் வந்தவர் என்றும் பொலிஸாரிடத்தில் தெரிவித்தார்.

கைதான ஒவ்வொருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததையடுத்து, அவர்களை தடுத்து வைத்து தொடர் விசாரணை செய்யுமாறு பொறுப்பதிகாரி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் 3 பேரும் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.