Mar 24

ரஜனி இலங்கை செல்லக்கூடாது; திருமாவளவன் அழுத்தம்

இலங்கை செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று ரஜினிக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் '2.0' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சே-வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது.

தமிழ்மக்களை வஞ்சிக்கும் இலங்கையின் கொடும்போக்கைக் கண்டித்து எல்லோரும் பேசவேண்டிய நேரத்தில், அதை திசைதிருப்பும் உத்தியாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறதோ என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. இலங்கை அரசுக்குத் துணைபோகும் பாஜகவின் அனுமதியோடு இவ்வறிவிப்புச் செய்யப்பட்டிருந்தாலும் வியப்பதற்கில்லை.

ஏனெனில், ரஜினிகாந்த் போன்ற புகழ்பெற்ற நடிகர் ஒருவரை வைத்து ஒருவிழாவை நடத்தி அந்த ஒளிவெள்ளத்தில் மக்களின் உண்மையான குறைகளை இருட்டில் தள்ளிவிடுவது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று உலகத்துக்குக் காட்டவும் இந்நிகழ்ச்சி பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

லைகா நிறுவனத்துக்கும், மிகப்பெரும் செலவில் தயாரிக்கப்படுகிற அந்தப்படத்துக்கான உலக அளவிலான விளம்பரமாக அந்நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணுகிறது. இலங்கை அரசாங்கத்துக்கும் தனியார் முதலாளிக்கும் நன்மை பயக்கும் இந்நிகழ்வைச் செயல்படுத்த எவ்வித நியாயமுமின்றி உறவுகள், உடைமைகள் மட்டுமின்றி உரிமைகளையும் இழந்து நிற்கும் அப்பாவி மக்களின் கொடுந்துயரம் பயன்படுகிறது என்பதை நினைக்கும்போது உள்ளம் கொதிக்கிறது.

கலைஞர்கள் மக்களை மகிழ்விப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டும், எனவே, நடிகர் ரஜினிகாந்த், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகத் தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டாம் என்று விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.

லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.