Jul 11

குடும்ப ஒன்றிணைவிற்கு உதவுமாறு அமைச்சரிடம் கோரிக்கை

Scarborough Civic Centre  இல் ஜூலை 5 அன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது தமது குடும்பங்கள் தம்முடன் ஒன்றிணைவதற்கு உதவுமாறு குடிவரவு  அமைச்சரிடம் அங்கு கூடியிருந்தோர் வேண்டுகோள் விடுத்தனர்.

தமது வாழ்க்கைத் துணையையோ அல்லது பிள்ளைகளையோ கனடாவிற்கு வரவழைப்பதற்காகக் காத்திருப்போர் பலர் அமைச்சரைச் சந்திப்பதற்காக அங்கு கூடியிருந்தனர்.

அவர்கள் பலர் தமது சோகக் கதைகளையும் பரிதாப நிலைமைகளையும் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். 10 வருடங்களாக தான் அகதியாகவே உள்ளதாக ஒருவர் தெரிவித்தார்.  

முன்னைய பழமைவாத அரசின் காலத்தில் தேங்கிக் கிடந்த ஆயிரக் கணக்கான அகதிக்கோரிக்கைகள் தொடர்பான பிரச்சனை விரைவில் தீர்க்கப்பட வெண்டும் என தான்  முன்னைய குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம் அவர்களிடம் தெரிவித்ததாக அமைச்சர் ஹூசேன் கூறினார். இவைகள் விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னைய பழமைவாத அரசு தனது 10 ஆண்டு கால அரசாட்சியில் செய்யத் தவறியவற்றை லிபரல் அரசு தனது முதல் 15 மாத அரசாட்சியில் செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அமைச்சருடனான இச்சந்திப்பு லிபரல் கட்சியின் ஸ்காபரோ பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தங்களது தொகுதி மக்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று குடிவரவு தொடர்பானதே எனவும், தமது அலுவலகங்களால் கையாளப்படும் பிரச்சனைகளுள் 80% ஆனவை குடிவரவு தொடர்பானவையே எனவும் ஸ்காபரோ-ரூச் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி அவர்கள் கூறினார்.