Apr 20

காணாமல் ஆக்கப்பட்டவரின் வயோதிபத் தாய் மீது தாக்குதல், முறையிட்ட போதிலும் பொலிஸார் நடவடிக்கை இல்லை!

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட போராளியின் 72 வயதுடைய வயோதிபத் தாய் மீது திருட்டு நோக்கத்தில் இருவரடங்கிய குழுவினர் வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனால் தலையில் படுகாயமடைந்து பாதிக்கப்பட்ட மேற்படி வயோதிபத் தாய் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்ப்பட்டவர் தாக்குதல் நடத்தியவர்களை இனங்காட்டி கிளிநொச்சி பொலிஸாரிடம் முறையிட்ட போதிலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் திருட்டு நோக்கத்துடன் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் தமக்குப் பொலிஸ் ஒன்றும் செய்யாது, பொலிஸாரைச் சமாளிக்கத் தமக்குத் தெரியும் எனக்கூறி சுதந்திரமாக நடமாடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் தமது வீட்டில் தனியாக இருந்த, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளி குன்றவையன் அவர்களின், 72 வயதுடைய தாயாரான சி.யோகம்மா என்னும் வயோதிபத் தாயார் மீது நேற்றைய தினம் (19.04.2019) காலை 9.00 மணியளவில் திடீரென அத்துமீறி வீட்டினுள் புகுந்த இருவர் அடங்கிய குழுவினர் அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்கள். இதனை அவதானித்த அயலவர்கள் அங்கு சென்ற போது அடித்துத் தள்ளி விழுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்கள்.

பலமான அடி காயங்களால் மயக்கமுற்ற மேற்படி 72 வயதுடைய வயோதிபத் தாய் அயலவர்களின் உதவியுடன் அவசர அம்புலன்ஸ் சேவை மூலம் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரின் வயோதிபத் தாய் தனியாக வீட்டில் இருந்த போது திடீரென வீட்டினுள் நுளைந்தவர்கள் அவரைத் தாக்கிக் கொலை செய்துவிட்டு திருடும் நோக்குடன் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி திருட்டு, கொலை முயற்சி தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் உடனடியாகவே முறையிடப்பட்ட போதிலும் இன்றுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் வீடு புகுந்து வயோதிபத் தாயைத் தாக்கிய குற்றவாளிகள், தம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது, பொலிஸாரைச் சமாளிக்கத் தமக்குத் தெரியும் என்று கூறி சுதந்திரமாக நடமாடித் திரிவதாக பலராலும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

வீடு புகுந்து தாக்குதல் நடத்திக் கொலை செய்து திருடும் முயற்சியில் ஈடுபட்டவர்களென பரந்தன் சிவபுரம் பகுதியில் தற்சமயம் வசிக்கும் தங்கராசா ராஜேஸ்வரி (கள்ளச்சாந்தி), தருமராசா யோகேஸ்வரி (கள்ளயமுனா) ஆகிய இருவரடங்கியவர்களென பாதிக்கப்பட்வராலும் அயலவர்களாலும் இனங்காணப்பட்டு பெயர் குறிப்பிட்டு பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.