Feb 27

மோடிக்கு கொலை அச்சுறுத்தல்: புதுடில்லியில் இளைஞர் கைது

உத்தரப் பிரதேசத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திங்கள் கிழமை பங்கேற்ற பொதுக் கூட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக புதுடில்லியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக, மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

டில்லி காவல் துறை கட்டுப்பாட்டு அறையை திங்கள்கிழமை காலை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய ஒருவர், உத்தரப் பிரதேச மாநிலம், மெளவ் நகரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டார்.

அதையடுத்து, தொழில்நுட்ப கண்காணிப்பு அமைப்பின் உதவியுடன் ஆய்வு செய்ததில், தொலைபேசியில் அழைத்தவர், உத்தரப் பிரதேச மாநிலம், ஆஸம்கர் மாவட்டத்தில் உள்ள தேவ்கான் கிராமத்தைச் சேர்ந்த தீபக்  என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து, ஒரு செல்லிடப்பேசியும், 2 சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது தில்லியில் தங்கியுள்ள அவர், திறந்தநிலை பல்கலைக்கழகம் ஒன்றில் பி.ஏ. பட்டப் படிப்பு படித்து வருகிறார் என்றார் அந்த காவல் துறை அதிகாரி.