Apr 17

தேசிய கட்சிகளை விமர்சிக்க கமல் பின்வாங்குவது ஏன்?


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக் கட்சிகளை விமர்சிக்காமல் மாநில கட்சிகளை மட்டும் விமர்சனம் செய்து பிரசாரம் செய்து வருகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்காக கமல்ஹாசன் தீவிரமாக தமிழகம் முழுக்க பிரசாரம் செய்தார்.அனைத்து தொகுதிகளிலும் ஒற்றை ஆளாக இவர் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தில் கமல்ஹாசன் அதிகம் விமர்சனம் செய்த கட்சி என்றால் அது தி.மு.கதான். ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.கவை விட கமல்ஹாசன் அதிகமாக தி.மு.கவைதான் விமர்சனம் செய்தார். ஆனால் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பெயரை அவர் பெரும்பாலான இடங்களில் வெளிப்படையாக குறிப்பிட இல்லை. தி.மு.கவின் வாரிசு அரசியலை அதிகம் கிண்டல் செய்தார்.

அதேபோல் அ.தி.மு.க குறித்தும் பேசினார். ஊழல்கள் குறித்தும், அடிமைத்தனம் என்று கூறியும் மிக அதிக அளவில் பேசினார். முக்கியமாக முதல்வர், துணை முதல்வர் இருவரையும் விமர்சனம் செய்தார். இடையில் சசிகலாவையும் அவ்வப்போது விமர்சனம் செய்தார். ஆனால் பெரிய அளவில் டி.டி.வி தினகரனை விமர்சனம் செய்யவில்லை.

ஆனால் கமல்ஹாசன் பெரிய அளவில் தேசிய கட்சிகளை இந்த பிரசாரத்தில் விமர்சிக்கவில்லை. காங்கிரஸ் குறித்தும், பா.ஜ.க குறித்தும் அவர் பெரிய அளவில் விமர்சனம் செய்து பேசவில்லை. நடப்பது லோக்சபா தேர்தலாக இருந்தாலும் கூட தேசிய கட்சிகளை விமர்சிப்பதில் மென்மையான போக்கையே கமல்ஹாசன் கடைப்பிடித்து வந்தார்.

கமல்ஹாசனின் இந்த பிரசார யுக்தி பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு பின் கூட்டணிக்காக அவர் தேசிய கட்சிகளை விமர்சிக்காமல் இருக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் எதிர்கால நன்மை கருதியும், எதிர்காலத்தில் தேர்தல் கூட்டணிகளை உருவாக்க திட்டமிட்டும் அவர் இப்படி செயல்படுகிறாரா என்றும் கேள்வி எழுந்து உள்ளது.

ஏற்கனவே தேர்தலுக்கு பின்னர் பா.ஜ.க, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைக்க எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்கள் தங்கள் அரசியல் போக்கை மாற்ற வேண்டும். தமிழக பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் எங்களை அவர்களிடம் விற்கப் போவதில்லை. தமிழக நலனுக்காக மட்டுமே இணைய போகிறோம் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்தார்.

இப்படி கூட்டணி கணக்குகளை மையமாக வைத்துதான் கமல்ஹாசன் இப்படி பேசுகிறார் என்று கூறுகிறார்கள். அதே சமயம் கமல்ஹாசனுக்கு தேசிய அரசியலை விட மாநில அரசியல் மீதுதான் கோபம் அதிகம் என்பதால் அது குறித்தே அதிகம் பேசுகிறார். வேறு எந்த காரணமும் இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.