Jul 10

கியூபாவில் உயிரிழந்த கனேடியர் 18 வயது மாணவி

இந்தவாரம் கியூபாவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட கனேடியர், ஒன்ராறியோவின் Belleville பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவியான அலெக்ஸ் ச்க்கிறிஃப்(Alex Sagriff) என்பதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தனது உயர்கல்வி பட்டமளிப்பினை பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக கியூபாவுக்குச் சென்ற வேளையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கியூபாவின் வரடேரா பகுதியில் உள்ள பயணிகள் விடுதி ஒன்றின் அறை ஒன்றில், கடந்த வியாழக்கிழமை இரவு அவர் அசைவற்ற நிலையில் காணப்பட்டதாகவும், அவரது மரணத்துக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை எனவும், அவரது உறவினர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கனேடியர் ஒருவர் கியூபாவில் உயிரிழந்துள்ளதாக அறிவித்த கனேடிய மத்திய அரசாங்கம், அந்தரங்க இரகசியப் பாதுகாப்பு கருதி குறித்த இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விபரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்திருந்தது.

இந்தச் சம்பவம் குறித்து கியூபாவில் உள்ள கனேடிய தூதரக அதிகாரிகள் அங்குள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும், அதேவேளை உயிரிழந்தவரின் குடும்பத்தாருடனும் அதிகாரிகள் தொடர்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.