Apr 15

வடக்கில் முழுமையான படைவிலக்கம் சாத்தியமில்லை - ருவன் விஜேவர்த்தன

வடக்கில் முழுமையான படைவிலக்கம் சாத்தியமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகளாகியுள்ள நிலையில்,வடக்கில் படை விலக்கம் தொடர்பாக, அரசியல் ரீதியான ஒரு முடிவு எடுக்கப்பட  வேண்டும் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியிருந்தார்.

இதுதொடர்பில், கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும், தேசிய பாதுகாப்பு, எல்லை கட்டுப்பாட்டுக் காரணங்களால், முப்படைகள் மற்றும் பொலிஸாரை தமது இடங்களில் இருந்து ஏனைய இடங்களுக்கு செல்லுமாறு கேட்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குறித்த பிரதேச மக்கள் உணருவார்களேயானால்,

அரசாங்கம் சம்பந்தப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஒரு முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தேசிய பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு, இப்போது, குறிப்பிட்ட இராணுவத் தளங்களை வேறு இடத்துக்கு மாற்றவோ, வடக்கில் இருந்து படைகளை விலக்கவோ, முடியாது என பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

இந் நிலைமையில் பொருத்தமான சாத்தியமான கொள்கை குறித்து கலந்துரையாடி, அரசாங்கம் பரிந்துரை ஒன்றை முன்வைக்க வேண்டும். எதிர்காலத்தில் அந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  வடக்கில் இருந்து படைகளை முழுமையாக விலக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.