Jul 09

சென்னையில் 'பேட்டரி' பஸ்

'அரசு போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான, 100 இடங்களில், பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சட்டசபையில், அவர் கூறியதாவது:தேசிய நெடுஞ்சாலைகளில், பொது மக்கள் வசதிக்காக, வணிக நடவடிக்கைகள் மேற்கொண்டு, போக்குவரத்துக் கழகங்களுக்கு வருவாய் ஈட்டப்படும். போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான இடங்களில், வங்கிகளின் ஒப்புதலோடு, ஏ.டி.எம்., மையங்கள் அமைக்கப்படும்.

மேலும், கழிப்பறை வசதியுடன் கூடிய பஸ்களின் எண்ணிக்கை, படிப்படியாக அதிகரிக்கப்படும். போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான, 100 இடங்களில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்களிப்புடன், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் சில்லரை விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். 

இதன் மூலம், போக்குவரத்துக் கழகங்களின் தேவையை பூர்த்தி செய்யவும், வருவாயை மேம்படுத்தவும் வழி ஏற்படும்.சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் உடுமலை பகுதி அலுவலகத்தில், ஓட்டுனர் தேர்வு தளத்துடன் கூடிய சொந்த கட்டடம் கட்டப்படும். போக்குவரத்து ஆணையத்தில், ஒரு இணை ஆணையர் பதவியிடம் கூடுதலாக உருவாக்கப்படும்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 'பேட்டரி' மூலம் இயங்கக்கூடிய பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும். இதனால், சுற்றுச்சூழல் மாசு தடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.