Apr 13

ஒன்ராறியோ அரசின் வரவு செலவுத் திட்டம் குறித்து சட்டவாளர்கள் அதிருப்தி!


டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சியின் ஒன்ராறியோ அரசு, வெளியிட்டுள்ள முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் ஒன்ராறியோ சட்ட ஆலோசனைச் சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் அகதிகள் மற்றும் குடிவரவாளர்களுக்கான சட்டச் சேவைகளுக்கான நிதி முற்றாக நீக்கப்பட்டுள்ள நிலையில், இதனை மிகவும் மோசமான ஒரு நடவடிக்கை என்று சட்டவாளர்கள் நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

குறிப்பாக, இதற்கு, சட்ட உதவிகளை வழங்கும் சுமார் 350 வழக்கறிஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிதிக் குறைப்பானது மிகவும் பாரதூரமானது எனவும், இது நீதித் துறையிலும் பெரும் தாக்கத்தின் ஏற்படுத்தக்கூடும் என்றும், குறித்த தொழிற்சங்கம் கூறியுள்ளது.

ஒன்ராறியோ சட்டத்துறை தனது பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மாநில அரசின் வரவு செலவுத் திட்டத்தில் தமது துறைக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதனைச் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டத்துறை இந்த நிதி ஆண்டுக்கு 456 மில்லியன் டொலர்களை எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய பாதீட்டின் அடிப்படையில் அதற்கு வெறும் 133 மில்லியன் டொலர்கள் மட்டுமே கிடைக்கவுள்ளன.