Apr 13

புத்துயிர் பெறப்போகும் பெங்களூர் அணி: வேகத்தால் மிரட்ட வருகிறார் ஸ்டெயின்!


ஐ.பி.எல். தொடரில் இடம்பெற்றுள்ள றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக, தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் களமிறங்கவுள்ளார்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக, ஏற்கனவே ஏலத்தில் எடுத்திருந்த அவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் குல்டர் நெய்ல், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடியதால் ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப போட்டிகளில் விளையாடவில்லை.

தற்போது நாதன் குல்டர் நெய்ல், மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்புவதால் அவருக்கு பதிலாக ஸ்டெயினைபெங்களூர் அணி நிர்வாகம் அழைத்துள்ளது.

அணியில் ஏற்கெனவே உமேஷ் யாதவ், டிம் சவுதி, கோலின் டி கிராண்ட்ஹோம், மார்கஸ் ஸ்டோனிஸ் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தும், அந்த அணியால் எழுச்சி காண முடியவில்லை. தற்போது ஸ்டெயினின் வருகையின் மூலம் அந்த அணி எழுச்சி பெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

விராட் கோஹ்லி தலைமையிலான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது.

இதற்கு முன் டேல் ஸ்டெயின் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பெங்களூர் அணிக்காக விளையாடியுள்ளார். அதன்பின் 2011ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஸ்டெயின் இடம் பெற்றார். அதன்பின் சன்ரைசர்ஸ் அணியிலும், குஜராத் லயன்ஸ் அணியிலும் இடம் பெற்று விளையாடிய ஸ்டெயினை, இம்முறை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.