Jul 08

வாவெட்டீச்சரர் ஆலயப்பூசை வழிபாட்டில் கலந்துகொண்ட வடமாகாணச்சார்பாளர்கள்.

காலத்தால் அழியாத வரலாற்றுப்பின்னணி கொண்ட ஒட்டுசுட்டான் வாவெட்டீச்சரர் ஆலயப்பூசைகள் நடைபெறுவதற்கு உதவவேண்டுமென்று மதிப்புறு வடமாகாணமுதல்வரிடம் மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அப்பகுதிகள் நேற்றையநாளில் மக்கள்சார்பாளர்களாலும் அதிகாரிகளாலும் ஒட்டுசுட்டான்வாழ்மக்களாலும் பார்வையிடப்பட்டன. 

இது தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

தமிழர் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த இடமாக வாவெட்டி மலைப்பகுதி காணப்படுகின்றது. முன்னைய காலத்தில் நாளாந்தம் பூசை வழிபாடுகள் ஈச்சரர், அம்மன் தலங்களுக்கு மரபுவழியில் நடைபெற்று வந்துள்ளதன.

இறுதிப்போரின் முடிவில் இப்பகுதிகள் வனஇலாகாவின் பொறுப்பில் கொண்டு வரப்பட்டதோடு இதன் அண்மித்த பகுதிகளில் கருங்கல் அகழ்வுகளும் நடைபெற்றுவருகின்றன. பாரம்பரியமாக ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்சரர் ஆலயத்துக்கும் வாவெட்டீச்சரர் ஆலயத்துக்குமுள்ள வழிபாட்டுத் தொடர்பில் இணைந்த பூசையாக வேட்டைத்திருவிழா நடைபெறுகின்றது. தமது பாரம்பரிய வழிபாட்டினை நாட்பூசையாக செய்வதற்கான ஒப்புதலைப்பெற்றுத்தரும்படி மதிப்புறு முதலமைச்சர் அவர்களுக்கு என்னூடாக கடந்த 2017.06.06ம் திகதி கடிதம் தரப்பட்டது.

மக்களுடைய நியாயமானதும், சமயச்சார்பானதுமான இக்கோரிக்கையை உடனேயே மதிப்புறு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அதற்கமைய குறிப்பிட்ட இந்த இடங்களைப் பார்வையிடும் பொருட்டு நானும் மதிப்புறு முதலமைச்சரின் அமைச்சுச்செயலாளர் திருமதி விஜயலட்சுமி கேதீசுவரன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்  மற்றும் ஒட்டுசுட்டான் மக்கள் எனப்பலரும் 2017.07.07ஆம் திகதி அப்புனிதவிடத்திற்குச்சென்றோம். அவ்விடங்கள் தமிழர் தம் வரலாறுகளை பறைசாற்றி நிற்கின்றது. குருக்களும் எம்முடன் வந்து அங்கு பூசைவழிபாடுகளும் செய்தோம்.

அப்பகுதி மக்களின் ஏகோபித்த கோரிக்கையான சமயவழிபாடுகளுக்கு ஏற்றவாறான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க  வேண்டியது அனைவரதும் கடமையாகின்றது. இப்பற்றியத்தில் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு ஆவன செய்வோம் என அம்மக்களிடம் தெரிவித்து விடைபெற்றோம் என்று தெரிவித்தார்.