Jul 08

வெடிகுண்டுடன் பாலர் பள்ளிக்கு வந்த குழந்தை! ஆசிரியர்கள் அலறல்!

ஜெர்மனியில் உள்ள பாலர் பள்ளி ஒன்றில் பயிலும் குழந்தை ஒன்று வெடிகுண்டுடன் வகுப்பில் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேற்கு ஜெர்மனியில் உள்ள டார்ம்ஸ்டாட் நகரில் இச்சம்பவம் நடந்தது. 

இப்பள்ளியில் பயின்ற குழந்தை ஒன்று நேற்று முன்தினம் வகுப்பிற்கு வந்த போது அதன் கைப்பைக்குள் வெடிகுண்டு இருப்பதைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், பள்ளியில் இருந்த குழந்தைகளை அவசரமாக வெளியேற்றிய ஆசிரியர்கள் வெடிகுண்டுகளைச் செயலிழக்க வைக்கும் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.

பாடசாலைக்கு விரைந்து சென்ற நிபுணர்கள், வெடிகுண்டை சோதனைச் செய்த போது அது இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பழைய வெடிகுண்டு எனத் தெரிய வந்தது. மேலும், குழந்தைக் கொண்டு வந்த அந்த வெடிகுண்டால் ஆபத்து இல்லை என்பதால் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.

காட்டுப் பகுதியில் இந்த வெடிகுண்டு எடுக்கப்பட்டதை அறிந்த அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியில் உள்ள பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டு, தாக்குதல் நடத்தப்பட்டதால் 70 ஆண்டுகளுக்குப் பிறகும் வெடிகுண்டுகள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன.

கடந்த கிறித்துமஸ் தினத்தன்று அக்ஸ்பெர்க் நகரில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சுமார் 54,000 பேர் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

 இதனிடையே, அந்தக் குழந்தைக்கு இந்த வெடிகுண்டு எப்படிக் கிடைத்தது? என்பதைக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.