Jul 08

கனேடிய பயணிகள் விமானத்தை வழிமறித்த அமெரிக்க போர் விமானம்!

கனடாவிலிருந்து கியூபா நோக்கி புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று, போர் விமானத்தின் உதவியுடன் திருப்பி அழைக்கப்பட்டு, தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று மொன்றியலில் இடம்பெற்றுள்ளது.

மொன்றியலில் இருந்து நேற்று மாலை புறப்பட்டுச் சென்ற சண்விங் நிறுவனத்துக்கு சொந்தமான WG604 இலக்க பயணிகள் விமானமே, அமெரிக்காவின் F-15 ரக போர் விமானத்தின் வழித்துணையுடன் மீள தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த பயணி ஒருவர் உண்மைக்கு புறம்பான அச்சுறுத்தலை விடுத்ததை அடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டதாக சண்விங் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானம் நேற்று இரவு 7.25 அளவில் பத்திரமான தரையிறக்கப்பட்டதாகவும், அதில் 170 பயணிகள் இருந்ததாகவும், அச்சுறுத்தலை ஏற்படுத்தி இந்த சம்பவம் இடம்பெறக் காரணமாக இருந்த நபர் காவல்த்துறையால் கைது செய்யப்பட்டதாகவும் விமான நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த அந்த விமானம் அமெரிக்காவின் நியூயோர்க் பகுதிக்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது, அமெரிக்க விமானப்படையின் F-15 போர் விமானமே அதனை வழிமறித்து, திருப்பிக் கொண்டு வந்ததாகவும், கனடாவின் CF18 போர் விமானங்களும் அந்த பகுதிக்கு துணைக்குச் சென்ற போதிலும், அருகே செல்லாது தொலைவிலிருந்தே நிலைமையினை அவதானித்தவாறு பறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், தரையிறக்கப்பட்ட பயணிகள் மீண்டும் பயணிக்கும் வரையில், அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளும், அவர்களுக்கான உணவுச் சீட்டுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் சண்விங் விமான நிறுவனம் தெரிவித்து்ளளது.

எனினும் இந்தச் சம்பவத்துக்கு காரணமாக குறித்த அந்த நபர் எவ்வாறான அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என்ற துல்லிய விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவிலலை.