Jul 08

G20 மாநாட்டில் கனேடிய பிரதமர்

G20 எனப்படும் பொருளாதார முன்னணி நாடுகளின் தலைவர்களது மாநாடு நேற்று  யேர்மனியின் ஹம்பேர்க் நகரில் ஆரம்பமாகியுள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ரூடோவும் ஹம்பேர்க் நகரைச் சென்றடைந்துள்ளார்.

மாநாடு நடைபெறவுள்ள வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த மாநாட்டை முன்னிட்டு போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

கலகத் தடுப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் நீர்த் தெளிப்பான்களைப் பயன்படுத்தி ஆர்பாட்டகாரர்களை கட்டுப்படுத்தியுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலிலேயே பிரதமர் ஜஸ்டின் ரூடோவும் அங்கு சென்று சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலகங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், அவை இடம்பெற்ற பகுதியில் இருந்து சிறிது தூரத்தில், ஹம்பேர்க் நகரின் வடமேற்கு பகுதியில் 12,000க்கும் அதிகமான செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்த உலக குடிமக்கள் கொண்டாட்ட நிகழ்வில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ மிகுந்த குதூகரத்துடன் வரவேற்கப்பட்டுள்ளார்.

தனது பாரியார் சகிதம் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர், கனடாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் குறித்து அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அனைத்துலக அளவிலும் கனடா இந்த கொள்கையையே கொண்டுள்ளது எனவும், கனடாவின் உதவித் திட்டங்களின் அடிநாதமாக பெண்கள் சிறுமிகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்களே உள்ளதாகவும், இதனையும் இந்த G20 மாநாட்டில் ஒரு செய்தியாக எடுத்துச் செல்ல இருப்பதாகவும், மக்களும் இந்த தகவலை ஏனையோருடன் பகிர்ந்து உதவ வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளியே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்த்துறையினருக்கும் இடையேயான கலகம் மட்டுமின்றி, மாநாட்டினுள்ளும் நாடுகளின் தலைவர்கள் மத்தியில் காணப்படக்கூடிய பதற்றத்தின் மத்தியில், மூன்று நாட்களை பிரதமர் ஜஸ்டின் ரூடோ இங்கு கழிக்கவுள்ளமை குறிப்பிடத்த்ககது.

G20 மாநாடு நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுளள் போதிலும், ஏற்கனவே அங்கு சென்று சேர்ந்துவிட்ட நாடுகளின் தலைவர்கள் நேற்று இரவு தங்களுக்கிடையேயான இருதரப்பு பேச்சுக்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை இந்த மாநாட்டு காலப்பகுதியில் அமெரிக் அதிபர் டோனால்ட் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டினும் முதன் முதலாக நேருக்கு நேர் சந்தித்து பேசவுள்ளமையும் இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக நோக்கப்படுகிறது.