Jul 07

காட்டுத்தீயால் ட்ரான்ஸ் கனடா நெடுஞ்சாலைமூடப்பட்டது

பிரிட்டிஷ் கொலம்பியா, கம்லூப்ஸ் பிராந்தியத்தின் மேற்கே, செரி கிறீக் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்துவரும் நிலையில், ட்ரான்ஸ் கனடா நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 ஹெக்டேயர் நிலப்பகுதியில் இவ்வாறு காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், 11 விமானங்களும், உலங்குவானூர்திகளும், பெருமளவான தீயணைப்பு படை வீரர்களும் இந்த காட்டுத் தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீ கட்டுப்பாட்டுப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த காட்டுத் தீயானது மனிதர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்க்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை செரி கிறீக்கில் நெடுஞ்சாலை 1இல் வாகனம் ஒன்று தீப்பற்றியதை அடுத்து அந்த பாதை ஊடான போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும், வாகனம் தீப்பிடித்த சம்பவத்துக்கும் இந்த காட்டுத் தீக்கும் தொடர்பு உள்ளதா என்ற விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

காட்டுத் தீ ஏற்பட்ட பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களில் 18 வீடுகளைச் சேர்ந்தோர் நேற்று மாலையில் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட போதிலும், மேலும் 165 வீடுகளைச் சேர்ந்தோர் வெளியேற்ற எச்சரிக்கையின் கீழேயே உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை வரையிலான நிலவரப்படி, தீப்பரவல் ஏற்பட்ட பகுதிகளில் சுமார் 6.5 ஹெக்டேயர் நிலப்பகுதியில் காட்டுத் தீ தணிக்கப்பட்டுள்ள போதிலும், சில நாட்களுக்கு இந்த காட்டுத்தீ தொடர்ந்து எரியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.