Jul 07

எல்லோரும் நீந்தினர்; அவர் மட்டும் மிதந்தார்! நீச்சல் போட்டியில் நடந்த துயரம்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற நீச்சல் போட்டி ஒன்றின் போது அனைத்து வீரர்களும் வெற்றியை நோக்கி நீந்திக் கொண்டிருந்த போது ஒருவர் மட்டும் அப்படியே மிதந்தவாறு இருந்தது பலருக்கு முதலில் ஆச்சரியத்தை அளித்தாலும் பின்னர் அதுவே அதிர்ச்சியாக அமைந்தது.

சூரிச்சில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்கும் இந்த நீச்சல் போட்டி வெகுவிமர்சையாக நடந்து வருகிறது.

நேற்று 29-ஆவது ஆண்டாக நீச்சல் போட்டி கோலாகலமாகத் துவங்கிய நிலையில், 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள சூரிச் ஏரியைக் கடக்க வீரர்கள் களமிறங்கினர்.

மாலை நேரத்தில் தொடங்கிய இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 10,705 நீச்சல் வீரர்கள் பங்கேற்றனர். போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் எல்லோரும் நீந்தி முன்னேறிக் கொண்டிருக்க, ஒருவர் மட்டும் தண்ணீரில் மிதந்தவாறு இருந்தார்.

முதலில் அவரது திறனைக் கண்டு ரசித்த மக்களும் ஏற்பாட்டுக் குழு அதிகாரிகள் சிலரும் சற்று நேரத்தில் அது குறித்த சந்தேகம் அடைந்தனர்.

உடனடியாக முதலுதவிக் குழுவினர் விரைந்து சென்று அவரை மீட்டனர். பின்னர் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். 

நீச்சல் போட்டியில் பங்கேற்றபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.