Mar 23

ஐ.நா.வில் இலங்கை குறித்த புதிய பிரேரணை ஏகமனதாக நிறைவேறியது

இலங்கையானது  2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை நிறைவேற்றுவதற்காக  இரண்டுவருட கால அவகாசம் வழங்கும் வகையிலான  புதிய  பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

பிரிட்டன், அமெரிக்கா மெஸடோனியா, மொன்டனேக்ரோ ஆகிய நாடுகளினால் இலங்கை  தொடர்பாக  கொண்டுவரப்பட்ட பிரேரணையே  இவ்வாறு நிறைவேற்றப்பட்டது. 

இதன்போது மனித உரிமை பேரவை  தலைவர்  பிரேரணை மீதான  வாக்கெடுப்பு தேவையா அல்லது   ஏகமனதாக  நிறைவேற்றுவதா என கேட்டார். அப்போது நாடுகள்   ஏகமனதாக நிறைவேற்ற   தயார் என  அறிவித்தன.   தொடர்ந்து பிரேரணையானது   ஏகமனதாக வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. 

இதேவேளை பிரேரணை நிறைவேற்றப்படும்போது  இலங்கையின் சார்பில் பதிலளிக்கும் நோக்கில் பிரதி வெ ளிவி்வகார அமைச்சர் ஹர்ஷ டி. சில்வா   பேரவையில் பிரசன்னமாகியிருந்தார்.   அவர் இலங்கை  சார்பில் உரையாற்றியிருந்தார்.

இந்தப் புதிய  பிரேரணையானது இலங்கை,  2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை  முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதை  வலியுறுத்தியுள்ளதுடன்  எதிர்வரும்  2019 ஆம் ஆண்டு வரை  கால அவகாசத்தையும் வழங்குகின்றது.