Jul 07

எலிசபெத் மகாராணியாருடன் “கனடா நாள்” கொண்டாட்டம்

ஒருவார கால அரசுமுறைப் பயணமாக ஐரோப்பா சென்றுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, கனடாவின் 150ஆவது பிறந்தநாளை மகாராணியாருடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற அந்த நிகழ்வினைச் சிறப்பிக்கும் வகையில், கனடா நாள் அன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சமாதான கோபுரத்தில் பறந்த கொடியையும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ மகாராணியாரிடம் கையளித்துள்ளார்.

தனது ஐரோப்பாவுக்கான பயணத்தில் நேற்று ஒரு நாளை எடின்பரோவில் கழித்த பிரதமர், அங்கு எலிசபெத் மாகாராணியாரை ஸ்கொட்லாந்தில் உள்ள அவரது பிரத்தியோக உத்தியோகபூர்வ இல்லத்திலும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அந்த சந்திப்பினை தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதமர் ஜஸ்டின் ரூடோ, பரந்துபட்ட அளவிலான உலகளாவிய விடயங்கள் மற்றும் கனடாவில் இடம்பெறும் விடயங்கள் குறித்து தாம் இருவரும் பேசிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று காலையில் எடின்பரோ பல்கலைக்கழகத்தினால் பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு கெளரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அதனை ஒட்டியே தமது பேச்சுக்கள் ஆரம்பமானதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த முதலாம் நாள் இடம்பெற்ற கனடாவின் 150ஆவது பிறந்தநாள் நிகழ்வுக்கு, நீண்டதூரம் பயணிக்க முடியாமை காரணமாக மாகாராணியார் கனடாவுக்கு வருகை தரமுடியாத நிலையில், கனடா நாள் நிகழ்வினை மாகாணராணியாருடன் கொண்டாடும் வகையிலேயே நேற்றைய இந்த முழுநாள் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.