Jul 06

ரிம.680 கோடி விவேகக் கைப்பேசிகள் விற்பனை! மோகத்தில் மலேசியர்கள்!

மலேசியாவின் கைத்தொலைபேசிப் பிரியர்கள் கடந்த வருடம் மட்டும் சுமார் 680 கோடி ரிங்கிட் மதிப்புள்ள விவேகக் கைத்தொலைபேசிகளை வாங்கி உள்ளனர் என்று ஜெர்மனியின் மிகப்பெரிய சந்தை ஆய்வு நிறுவனமான 'ஜி.ஃப்கே' நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

2015-ஆம் ஆண்டு 540 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை ஒரே ஆண்டில் அபார வளர்ச்சியைக் காட்டியிருக்கிறது. இதற்கு 900 ரிங்கிட் தொடங்கி 1050 ரிங்கிட் வரையில் விற்பனை செய்யப்படும் நடுத்தர வகை விவேக கைத்தொலைபேசிகளின் வரவே காரணமாகும்.

கடந்த 2016ஆம் ஆண்டின் மார்ச் மாதம் தொடங்க இவ்வாண்டு பிப்ரவரி வரை மேற்கொண்ட ஆய்வில் வழி உறுதியாகிறது என ஜி.ஃப்கே ஆய்வு நிறுவன தென்கிழக்கு ஆசிய  தலைமை நிர்வாகி ஸ்டான்லி கீ தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

அவ்வகையில், சீன நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட பலவகையான கைத்தொலைப்பேசி மாடல்களினால் வாங்குவோர் எண்ணிக்கையை கூடியுள்ளது. பெரும்பாலான மக்கள் சீன மாடல் விவேக கைத்தொலைப் பேசிகளையே வாங்கியுள்ளனர். 

இந்த விவேக கைத்தொலை பேசிகளை ஆன்லைன் ஷாப்பிங், சமூக வலைத்தளம், மற்றும் இதர இணைய பயன்பாட்டிற்காகத்தான் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதாக அவர் சொன்னார்.

37 விழுக்காடு விவேக கைத்தொலைப் பேசியின் விற்பனையானது அதன் திரையின் அளவு 5.01 லிருந்து 5.6 அங்குலமாக அதிகரித்த தருணத்தி லேயே நிகழ்ந்துள்ளது.  

மேலும், தொலைபேசி மூலம் நடத்தப்படும் வணிகம் அதிகரித்து வருவதாலும் இந்த விவேக கைத்தொலைப்பேசியின் விற்பனையை அதிகரித்துள்ளது. விமான டிக்கிட் வாங்குதல் கிராப், உபர் போன்ற வாடகைக் கார் சேவைகள் இதில் அடங்கும்.

பெரும்பாலான மலேசிய மக்கள் விலையையும் முத்திரையையுமே பார்த்து தொலைபேசியை வாங்குகின்றனர். இதனால், நடுத்தர வகை விவேகக் கைத்தொலைபேசிகளே தொடர்ந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் இருக்கும் என அவர் ஆருடம் தெரிவித்தார்.