Jul 06

கனேடிய – அயர்லாந்து பிரதமர்களிடையே பேச்சுவார்த்தை

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கும், அயர்லாந்து பிரதமர் லியோ வரட்காருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

தனது ஒரு வாரகால ஐரோப்பியப் பயணத்தில் முதல் கட்டமாக அயர்லாந்து சென்றுள்ள நிலையிலேயே, பிரதமர் ஜஸ்டின் ரூடோ நேற்று அந்த நாட்டு பிரதமரைச் சந்த்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது முக்கியமாக சீட்டா எனப்படும் கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சுவார்தையுடன் இழுபறியில் இருந்துவந்த இந்த சீட்டா ஒப்பந்தம் கடந்த ஆண்டில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்த போதிலும், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் அதனை தனித்தனியே அங்கீகரிக்க வேண்டிய இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவ நாடுகளின் ஆதரவினை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது.

குறிப்பாக கனடாவுக்கும் அயர்லாந்துக்கும் இந்த உடன்பாடு குறித்த ஒருமித்த நிலைப்பாடு காணப்படும் நிலையில், இந்த உடன்பாட்டில் சற்று தயக்கத்தினை வெளிப்படுத்தும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இதற்கு சார்பான நிலையினை ஏற்படுத்துவதற்கு அயர்லாந்து உதவக்கூடும் என்ற கனடா எதிர்பார்ப்பாகவும் இந்த சந்திப்பு கருதப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, இந்த சீட்டா ஒப்பந்தமானது கனேடிய மற்றும் அயர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பரஸ்பரம் சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதுடன், இரண்டு நாடுகளின் காத்திரமான பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.