Jul 06

தமது விவகாரத்தில் கனடா தலையிடக்கூடாது: சவூதி அரேபியா

கனடா தனது சொந்த விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பிக்க வேண்டும் எனவும், தமது நாட்டு விவகாரங்களில் மூக்கை நுளைக்கக் கூடாது என்றும் சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

குறிப்பாக அவூதி அரேபிய சிறையில் உள்ள வலைப் பதிவாளர் றெய்ஃப் படாவி விடயத்தில் கனடா தனது அலுவல்களை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பது நல்லது என்று கனடாவுக்கான சவூதி அரேபிய தூதர் நெஃப் பின் பான்டிர் அல்சுடைறி தெரிவித்துள்ளார்.

ஒட்டாவாவில் வைத்து நேற்று இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ள அவர், தமது நாட்டின் நீதித்துறை வழங்கும் தீர்ப்புகளை கனேடிய அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு யூன் மாதம் கைதான இணைய கருத்துப் பதிவாளரான படாவிக்கு, சவூதி அரேபிய நீதிமன்றம் ஆயிரம் கசையடிகளையும், பத்து ஆண்டு சிறைத் தண்டனையையும் விதித்துள்ளதுடன்.

அவருக்கான முதல் 50 கசையடிகளும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், அவரது மோசமான உடல்நிலை காரணமாக, மீதிக் கசையடிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறான நிலையில் இந்த விடயம் அனைத்துலக அளவிலான கண்டனத்தை பெற்றுள்ளதுடன், இந்த விடயத்தில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடே போதிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று அனைத்துலக மன்னிப்புச் சபையும் குற்றஞ்சாட்டியுள்ளது.

குறித்த அந்த நபரான படாவி கனேடியர் இல்லை என்ற போதிலும், அவரது மனைவியும் மூன்று பிள்ளைகளும் கியூபெக்கில் வசித்து வருகின்றனர் என்ற அடிப்படையிலேயே, கனடா இது குறித்து காத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

அத்துடன் குறித்த அந்த குடும்பத்தினர், குறிப்பாக பிள்ளைகள், தமது தந்தையை விடுவிக்குமாறு சவூதி அரேபிய அதிகாரிகளிடம் தனிப்பட்ட ரீதியில் பேசுமாறு பிரதமர் ஜஸ்டின் ரூடோவிடம் கடந்த மாதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி குறித்த அந்த நபரின் விடுதலையை வலியுறுத்தி கியூபெக்கில் மட்டும் 200க்கும் அதிகமான பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், கனேடிய அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட ரீதியில் பேசியுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே தமது விவகாரங்களில் கனடா இவ்வாறு மூக்கை நுளைப்பது நல்லதல்ல எனவும், கனடா தனது சொந்த விவகாரங்களை மட்டும் பார்த்தால் போதுமானது என்றும் தெரிவித்துள்ள கனடாவுக்கான சவூதி அரேபிய தூதர், இந்த விடயத்தில் தமது அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கம் நடவடிக்கையை கனடா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கனேடிய நீதிமன்ற தீர்ப்புகளை தாம் மதித்து வருவதாகவும், அதேபோல கனடாவும் சவூதி அரேபிய நீதிமன்றின் தீர்ப்புக்களை மதிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.