Mar 25

பசியால் கதறிய குழந்தை: பாலூட்டுவதற்கு முன்வந்த 9 தாய்மார்கள் – சுவாரஷ்ய சம்பவம்

சுமார் 10 மணித்தியாலங்களாக, பசியால் கதறிய சிசுவுக்கு ஒன்பது தாய்மார் பாலூட்டுவதற்கு முன்வந்த சுவாரஷ்ய சம்பவமொன்று திருகோணமலை, நல்லதண்ணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சிவனொளிபாதமலைக்குச் செல்வதற்காக, தனது எட்டுமாத சிசுவுடன் மத்துகமவைச் சேர்ந்த தாயொருவர் சென்றிருந்தார்.

அங்கு அதிகளவிலான குளிர் நிலவியதால், தான் சுற்றுலா வந்திருந்த பேருந்திலேயே குழந்தையை வைத்திருக்குமாறு, தன்னுடைய தாயாரிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு மலைக்குச் சென்றுள்ளார்.

எனினும், அவர் திரும்பி வருவதற்கு தாமதமாகியது. இதற்குள் அந்த குழந்தை பசியால் கதறியுள்ளது. பேருந்திலிருந்தவர்கள் பல முயற்சிகள் செய்தும், குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. அது குறித்து நல்லதண்ணி பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர்.

தாய்ப் பாலூட்டும் இன்னொரு தாயின் மூலம் குழந்தையின் பசியை போக்க முடிவெடுத்த பொலிஸார், ஒலிபெருக்கியின் ஊடாக விவரத்தை அறிவித்து, தாய்ப் பாலூட்டும் தாய்மார்களின் உதவியைக் கோரினர்.

இதையடுத்து ஒன்பது தாய்மார் பாலூட்டத் தயாராக இருப்பதாக பொலிஸாரை தொடர்பு கொண்டனர். அந்த ஒன்பது பேரிலிருந்து, நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த சுனித்தா என்பவர் தெரிவுசெய்யப்பட்டு, குழந்தைக்கு பாலூட்டினார்.