Jul 06

ஜேர்மனிய நகரில் ஜி20 உச்சிமாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வன்முறை ஆர்ப்பாட்டம்

ஜேர்மனிய  ஹம்பேர்க் நகரில் ஜி20   உச்சிமாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து  வன்முறை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்நகரில்  ஜேர்மனிய  அதிபர் அஞ்ஜெலா மெர்கலின் தலைமையில்  நாளை வெள்ளிக்கிழமை மற்றும்  அதற்கு மறுதினம் சனிக்கிழமை ஆகிய நாட்களில் ஜி20  நாடுகளின் உச்சிமாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி மாநாட்டில் உலகின் மிகவும் அபிவிருத்தியடைந்த பொருளாதார முன்னேற்றமடைந்த 20  நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

அந்த மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து  ஹம்பேர்க் நகரில் இடம்பெற்ற  ஆர்ப்பாட்டத்தில் சுமார் 8,000  பேர் வரை பங்கேற்றதாகவும் அவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் மிளகுதூள் பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் இடம்பெற்ற மோதலில்  அவ்வழியாகச் சென்ற ஒருவர் சிக்கி காயமடைந்துள்ளார். அத்துடன் ஒருவர்  பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.