Mar 23

விவசாயத்திலிருந்து விலகி செல்லும் இளைஞர் படையணி


இலங்கை ஒரு விவசாய நாடு என்று வகைப்படுத்தப்பட்டிருப்பதுடன் நாட்டின் தேசிய பொருளாதாரத்திலும் கணிசமான பங்களிப்பினை ஆற்றி வருகின்றது. மன்னர் ஆட்சிக் காலத்தில் கூட விவசாய நடவடிக்கைக்கென பாரிய குளங்கள் நிர்மாணிக்கப்பட்டு விவசாயம் வருடம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

எமது நாட்டு மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தையே பிரதான தொழிலாகவும் வருமானம் தரக் கூடிய தொழிலாகவும் கருதி முழுக் கவனத்தையும் செலுத்தி வந்தமையினால் நாட்டில் உணவு உற்பத்தி பாரிய வளர்ச்சி கண்டு வந்துள்ளது. இவர்களது விவசாய நடவடிக்கைகள் யாவும் இயற்கையுடன் இணைந்ததாக அமைந்துள்ளதால் காலநிலையும் உணவு உற்பத்திக்கு சாதகமாக இருந்தது எனக் கூற முடியும்.

ஆங்கிலேயர்கள் இலங்கையை கைப்பற்றி தமது அரசாட்சியை நிறுவிய போது பாரம்பரிய விவசாய உற்பத்திகள் பாதிப்படைந்தன. ஆங்கிலேயர்கள் தமது நாட்டு மக்களுக்கு தேவையான உணவு, பானம், கைத்தொழில் இயந்திர சாதனங்களுக்குத் தேவையான இறப்பர் போன்ற மூலப்பொருள் உற்பத்திகளில் அதிக கவனம் செலுத்தி மலைநாட்டுப் பிரதேசங்களில் தமது நடவடிக்கையினை ஆரம்பித்தார்கள்.

இதனால் கரையோரப் பிரதேச விவசாயம் பாதிப்பிற்குள்ளாகியதுடன் நாட்டின் பாரம்பரிய விவசாய செய்கையில் கணிசமான வீழ்ச்சியும் ஏற்பட்டது. இதுவே எம் இளைஞர் படை விவசாயத்திலிருந்து மாற்று தொழில்துறைக்கு செல்ல காரணமாக அமைந்தது என பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். இதனுடன் இணைந்ததாக தமது மதத்தினைப் பரப்பும் எண்ணக்கருவின் தொடக்கமாக கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி ஆங்கில மொழி பயின்றால் அரச வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவித்து இதை நடைமுறைக்கும் கொண்டு வந்தனர்.

அரச உத்தியோகம் கிடைக்கப் பெற்றதுடன் அவர்களின் கலாசார மரபுகளை பின்பற்றியதுடன் உணவுப் பழக்கத்திற்கும் தங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வாழத் தலைப்பட்டதால் எமது நாட்டில் புதிய கலாசாரம் தோற்றம் கண்டது. இந்த கலாசார மோகம் தற்கால இளைஞர், யுவதிகளை மையல் கொள்ள வைத்துள்ளதுடன் ஆண் பெண் வர்க்க பேதமின்றிய மதுபோதை கலாசாரத்திற்கும் வித்திட்டது எனலாம்.

1948இல் சுதந்திரமடைந்தவுடன் வந்த ஜனநாயக அரசுகள் எமது நாட்டிலுள்ள இயற்கை வளங்களைக் கொண்டு விவசாய புரட்சியினை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தன. இதன் ஒருபகுதியாக பாரிய நீர்ப்பாசன சமுத்திரங்கள், பெரிய சிறிய நடுத்தர கிராமிய குளங்கள் என ஏராளமான குளங்கள் அமைக்கப்பட்டன. இதில் மகாவலி திட்டம் மிகப் பெரிய திட்டமாகவும் நாட்டுக்கு பாரிய செல்வமாகவும் அமைந்துள்ளது.

விவசாயத்துறையின் புரட்சி காரணமாக நாட்டு மக்கள் தமது பாரம்பரிய விவசாய நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தியதுடன் தமது பிள்ளைகளையும் ஈடுபடுத்தலாயினர். அன்றைய அரசுகள் காலத்தில் காடுகள் வெட்டி களனிகள் உருவாக்கிய விவசாயப் பெருமக்களுக்கு அரச காணிகளை உரிமையாக்கும் நோக்கில் காணி உத்தரவுப் பத்திரங்களை அரசு வழங்கியது. இந்த காணி உத்தரவுப் பத்திரமானது விவசாய நடவடிக்கைக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்றும் ஒரு விவசாயி தனது வயோதிபக் காலத்தில் தனது மூத்த ஆண் பிள்ளைக்கு மட்டுமே வழங்க முடியும் என்றும் வேறு எவருக்கும் கைமாற்றம் செய்ய முடியாது எனவும் கண்டிப்பாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த விவசாயிக்கு ஆண் வாரிசு இல்லாதவிடத்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் தமது பிள்ளைகள் விவசாயத்தை காலாகாலாமாக மேற்கொள்ள வழி ஏற்பட்டது.

ஆனால் பின்னாளில் வந்த அரசுகள் விவசாயிகளின் நலன் கருதி நிரந்தர அரச காணி உத்தரவுப் பத்திரங்களை வழங்கி விவசாயிகளை கௌரவப்படுத்தியதுடன் விவசாயத் துறைக்குத் தேவையான உள்ளீடுகளையும் வட்டி இல்லாக் கடன்களையும் அல்லது மானியமாகவும் பல்வேறு உதவிகளையும் வழங்கியதால் உணவு உற்பத்தி பாரிய வளர்ச்சி கண்டு வந்தது.

இலங்கையில் தாராள பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாரிய கைத்தொழில் புரட்சியும் தொழில் பேட்டைகளும் ஆரம்பமாகின. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிய பாரிய மனித வலு தேவைப்பட்டதால் கிராமப்புறங்களிலிருந்து பெருவாரியான இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்பட்டனர். நகரங்களில் உள்ள வேலையாட்களை விட கிராமப்புறங்களிலிருந்து பணியாட்களை திரட்டி பயிற்சிகள் வழங்கி குறைந்த ஊதியத்தில் தமது உற்பத்திகளை மேற்கொள்ள முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி இதை நடைமுறையிலும் சாதித்துள்ளனர்.

இதன் மூலமாகவும் பெருவாரியான கிராமிய இளைஞர் யுவதிகள் பாரம்பரிய விவசாயத்திலிருந்து விலகி கைத்தொழில் புரட்சிக்குள் புகலாயினர். இந்த தொழிற்துறை வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய போதாமலிருந்த போதிலும் நகர டாம்பீகமான வாழ்வு புதுவகையான உணவு முறை கலாசாரம் என்பனவற்றினால் தமது மனங்களை ஆறவைத்து பல்வேறு சிரமங்கள் நெருக்கடிகள் கலாசார சீரழிவுகளையும் தாங்கி தமது வாழ்வினை நகர்த்தி வருகின்றார்கள்.

இன்று இளைஞர் படையணி அரச தொழில்வாய்ப்பினை மட்டுமே நம்பி தமது வாழ்நாளை தொலைத்து வருகின்றார்கள். அரச வேலை என்ற கௌரவத்தினை சமூகம் கூடுதலாக எதிர்பார்க்கின்றது. கிராமங்களில் ஒரு விவசாயிக்கு தமது பெண் பிள்ளையினை திருமணம் செய்து வைக்க எந்த மதத்திலுள்ள இனத்திலுள்ள பெற்றோர்களும் முன்வருவதில்லை. ஒரு வயது வந்த பெண் பிள்ளை ஒர் ஆடவனை காதலித்தாலும் அரச உத்தியோகம் கிடைக்கவில்லை என்றால் கரம்பற்ற தயங்கும் காலமிது.

விவசாயிக்கு மாதாந்தம் கூடுதலான வருமானம் கிடைக்கின்ற போதிலும் சமூகத்தில் கௌரவமான இடத்தை சமூகம் தருவதில்லை. --------------- மாற்றம் காணாத வரை நாட்டின் பொருளாதார பாதிப்பு தொடர்வதுடன் பாரம்பரிய விவசாய தொழிற்துறையும் பிவிருத்தி காணாது.

மேலும், பாரம்பரிய விவசாய உற்பத்தியில் காலநிலை பாரிய பங்களிப்பினை செய்கின்றது. மழை வீழ்ச்சி பரம்பல் மாற்றம் காற்று வீசும் நிலை போன்றவற்றினாலும் வட கீழ் – தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இலங்கையின் பெரும்போகம் மற்றும் சிறுபோக விவசாய செய்கையில் பாரிய பாதிப்புக்கள் காணப்படுகின்றது. இதனால் உலர் இடைஈரவலயப் பிரதேச பயிர்களின் அறுவடைகளில் தாக்கம் ஏற்படுகின்றது.

மழை வீழ்ச்சி மாற்றத்தின் விளைவுகளைக் கவனிக்கையில் சீரான மழை வீழ்ச்சிக்குப் பதிலாக குறுகிய கலத்திற்குள் அதிக மழைவீழ்ச்சி, அல்லது மழை வீழ்ச்சி கிடைக்காமை போன்றன. அதிக மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மொத்த விவசாய நடவடிக்கையும் அழிவடையும். இதுபோல் வரட்சியினாலும் நீர் பற்றாக்குறை ஏற்படுவதால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தும்.

இன்று விவசாயத் தொழிற்துறை பாரிய இயற்கை பேரழிவிற்கு முகம்கொடுத்திருப்பதனால் விவசாயிகள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து தமது குடும்பம் வறுமையில் வாடும் நிலையினை எவருமே தாங்கிக் கொள்ள மாட்டார்கள். மாற்று தொழிற்துறைக்கு மாறியே ஆக வேண்டிய கட்டாய சூழல், இதுவும் இளைஞர்கள் விவசாயத் தொழில் துறையிலிருந்து விலகி விடுவதற்கும் விவசாயத்தை வெறுப்பதற்கும் முக்கிய கருப்பொருள் என்று சொல்ல முடியும். விவசாயிகளின் வறுமை நீக்கப்படுவதும் அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையம் அரசும் தனியார் துறைகளும் ஏற்படுத்தல் அவசியம்.

இவற்றிற்கும் மேலாக விவசாயமும் பிரதான தொழில் என்ற மனோநிலையும் சமூகத்தில் போதிய அந்தஸ்துடைய வருமானம் ஈட்டும் தொழில் என்ற மனோநிலையினை நாம் உருவாக்க வேண்டும். இதனாலேயே விவசாயமும் விவசாயியும் அபிவிருத்தி காணுவதுடன் பொருளாதார இலக்கை திட்டமிட்ட அடிப்படையில் அடைய முடியும். குடிமக்களின் உயர்வு அந்த நாட்டின் தலைமைத்துவம் உயர வழிவகுக்கும். அரசுகள் எதிர்கால திட்டமிடலில் விவசாயத் தொழிற் துறைக்கு அதிக நன்மை பயக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதுடன் படித்த இளைஞர்களை (பட்டதாரிகளை) விவசாய தொழிற்துறைக்குள் உள்வாங்கும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தலின் ஊடாக நாட்டில் மனித வலுவின் சக்தி சீரழியாமல் பாதுகாக்கப்படும்.