Mar 21

மக்கள் பிரதிநிதிகள் தமிழர்களின் பிரச்சினைகளை உரிய முறையில் அணுகாததாலேயே பல்கலைக்கழக மாணவர்கள் மக்களுக்காக போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்!!

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தம்மைதாமே கூறிக்கொள்பவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளை உரிய முறையில் அணுகாததன் காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் மக்களின் போராட்டத்தை தமது கைகளில் எடுத்துள்ளனர். ஆகவே காலம் தாழ்த்தாது, தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காண்பதற்கும் உரிய முறையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கும் முன்வரவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சபையில் அழுத்தமாக கோரிக்கை விடுத்தார்.

வரவு-செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மூன்றாம் நாள் கல்வி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் 15.03.2019 அன்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில், 

உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கிம் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டன. அடுத்த சில வாரங்களில் அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கிம், உயர்கல்வி அமைச்சின் செயலாளர்  பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், வவுனியா வளாக முதல்வர் கலாநிதி.மங்களேஸ்வரன், பொது அமைப்புகள், மற்றும் வன்னிக்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்பதற்காக  குரல்கொடுத்த அனைவருக்கும் பாராளுமன்றத்தில் நன்றி கூறினார்.

மேலும், வவுனியா வளாகத்திற்கான அவசியமான பௌதீகவளங்களை ஏற்படுத்துவதற்காக 2014ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பின்வரும் செயல்திட்ட முன்மொழிவுகள் தேசியதிட்டமிடல்  திணைக்களத்தினால் திறைசேரிக்கு பரிந்துரைக்கப்பட்டபோதும் இருமாடிகள் கொண்டகட்டிடத் தொகுதி மதிப்பீடு 333 மில்லியன் ரூபா, 1000பார்வையாளர்கள் ,அமரக்கூடிய மண்டபம் ரூபா 198 மில்லியன் ரூபா, மூன்றுமாடிகள் ஊழியர்கள் தங்குமிட கட்டிடத் தொகுதி 178 மில்லியன் ரூபா ஆகிய வேலைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஜந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை என்பது ஆற்றல் மிக்க ஏழை மாணவர்கள் நிதி வசதியின்மை காரணமாக கல்வியை இடைநிறுத்தி விடக்கூடாது என்பதற்காகவும் அத்தகையை மாணவர்களுக்கு பாடசாலைக்கல்வியை முழுமையாக வழங்குவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும். ஆனால் தற்போது இந்நோக்கம் மாற்றப்பட்டு நகர பாடசாலைகள் மற்றும் பெயர்பெற்ற பாடசாலைகளாக கருதப்படும் பாடசாலைகளுக்கு அனுமதி பெறும் பரீட்சையாக மாற்றப்பட்டுள்ளது.

புலமை பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெறும் கிராமப்புற மாணவர்கள் உட்பட அனைவரும் நகர்ப்புற பாடசாலை மற்றும் பெயர் பெற்ற பாடசாலையில் ஆறாம் தர அனுமதியை பெறுவதால் கிராமபுறத்தில் உள்ள  பெருமளவு பாடசாலைகள் மாணவர்கள் இல்லாது தரம் ஆறுக்கு மேல் மிக குறைந்தளவு மாணவர்களை கொண்டிருக்கும் சூழ்நிலை  ஏற்படுகிறது. இது அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் மத்திய அரசின் கொள்கைக்கு முரணாகும். இதனால் இப்பரீட்சையை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் கல்வி அதிகாரம் மத்தி, மாகாணம் என்று இல்லாமல் முழுமையாக மாகாணத்துக்கு வழங்கப்படவேண்டும். மாகாண பாடசாலைகளின் ஒதுக்கீடுகளும் ஆசிரிய அதிபர் ஊதியங்களும் மகாண சபையால் வழங்கப்படுகிறது. 

தேசிய பாடசாலைகளில் மத்திய கல்வி அமைச்சால் வழங்கப்படுகிறது. இது ஒன்றே தேசிய பாடசாலைக்கும் மாகாண பாடசாலைக்கும் உள்ள வித்தியாசம்.இருவகை பாடசாலைகளுக்குமான பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் ஒன்றே. இப்பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களின் தராதரங்கள் மற்றும் ஆசிரிய பயிற்சிகள் என்பனவும் ஒன்றே. இவர்களுக்கான சம்பள அளவுத்திட்டமும் ஒன்றே ஆகவே இந்த வேறுபாடு அதிகார பங்கீட்டை பலவீனப்படுத்துவதை தவிர வேறு எதையும் சாதிக்க வில்லை. 

தேசிய பாடசாலைகள் எனப்படுவபை தரமுயர்ந்த பாடசாலைகள் என்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தை பொறுத்தவரை தேசியப்பாடசாலைகள் எனப்படும் பாடசாலைகள் பல மாகாணப்பாடசாலைகளை விடவும் வளம் குன்றியும் மாணவர்களின் அடைவு மட்டம் குன்றியும் காணப்படுகிறது. எனவே தேசியப்பாடசாலைகள் என்கின்ற திட்டம் மாகாண, தேசியப் பாடசாலை என்ற பாரபட்சத்தை ஏற்படுத்துகின்ற அதேவேளை கல்வியிலும் தேவை இல்லாத குழப்பத்தை ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் தேசிய பாடசாலைகளில் அளவுக்கதிகமாமன மாணவர் சேர்க்கையும் கண்மூடித்தனமாக வகுப்புகளில் அதிக பிரிவுகளை ஏற்படுத்தும் செயற்பாடும் பெருமளவு மாகாண பாடசாலை மாணவர்களை தேசிய பாடசாலைக்குள் இழுத்துவருகின்ற ஒரு நிலையை ஏற்படுத்துகின்றது. இது பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கிறது. எனவே தேசியப்பாடசாலை ஒழிக்கப்பட்டு, அதிகார பகிர்வு உன்மை தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

முன்பள்ளிகளை பாடசாலையுடன் இணைத்து கொள்ளல் வடக்கின் பல பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கான மாணவர்கள் மிக குறைவாக இருக்கின்ற அதே வேளை சில பாடசாலைகளில் அதீதமான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளீர்கப்படுகின்றனர். இதனால் குறைந்த அளவு மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் அதிபர்கள் அண்மித்த பாடசாலை நிர்வாகத்திடம் கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அதிபர்களுடைய கௌரவத்தைப் பாதிப்பதுடன் பாடசாலையின் சீரான வளர்ச்சியையும் பாதிக்கின்றது எனவே முன்பள்ளிகளை தனியார் நடத்துகின்ற நிலையை மாற்றி பல ஆண்டுகளுக்கு முன்னால் செயற்பட்டது போன்று முன்பள்ளியையும் பாடசாலையின் ஓர் அங்கமாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். 

அத்துடன் கல்வி அமைச்சின் அயல்பாடசாலை சிறந்த பாடசாலை என்னும் எண்ணக்கருவிற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். பாடசாலை கல்வி தொடர்பாக நாடு தழுவிய வகையிலும் சரி குறிப்பாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் சரி அனைத்து பாடசாலைகளுக்கும் போதிய பௌதீக வளங்களை அளிப்பதுடன் மாணவர்களையும் சம அளவில் பகிரவேண்டும். 

ஆசிரிய பயிற்சி கலாசாலை மற்றும் தேசிய கல்வியற் கல்லூரி என்பவற்றை மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.இத்தகைய முக்கிய சீர்திருத்த திட்டங்களை அமுல்படுத்தினால் மட்டுமே கல்வி அமைச்சானது தனது ஒதுக்கீடுகளை மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் செலவளிக்கமுடியும் என்பதுடன் கல்வி நிர்வாகத்தில் ஊழலற்ற சிறந்த நிர்வாகத்தை கட்டியெழுப்புவதுடன் நாடுதழுவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை வழங்கமுடியும். 

பாடசாலைகளுக்கான பாடத்திட்டங்கள் பெரும்பாலும் சிங்கள மொழியிலே உருவாகி தமிழில் மொழிபெயர்த்தே அச்சிடப்படுகிறது. இதில் மூன்று பிரச்சினைகள் எழுகின்றன. சிங்கள் மொழியில் உருவாகி தமிழில் மொழி பெயர்த்து பாடநூல்கள் வழங்கும் போது அதில்  சிங்கள உள்ளடக்கங்கள் காணப்படுவதால் மாணவர்களிடம் ஒரு அந்நிய உணர்வு ஏற்படுகின்றது. பாடநூல்களை மொழிபெயர்த்து வழங்கும்போது கருத்துப் பிழைகள் உட்பட பல குறைபாடுகளுடன் தமிழ் புத்தகங்கள் வெளிவருகின்றது. இதனால் மாணவர்கள் கற்றலில் பலத்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இலங்கையின் வரலாறு மற்றும் சமூகம் சார்ந்த பாடநூல்களில் இலங்கையின் ஆதி நாகரீகமான சைவத் தமிழ் நாகரீகமும் ஆதித் தமிழ் மன்னர்களின் உன்மையான வரலாறும் திரிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் ஊடாக இந்த நாட்டின் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாறாக காட்டப்பட்டு பொய்யான வாரலாறு கற்பிக்கப்படுகிறது.

எனவே இலங்கையின் வரலாற்றுப் பாடநூல்கள் அனைத்தும் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் பாரபட்சம் அற்ற வகையில் வெளிப்படுத்த கூடிய சிங்கள, தமிழ், முஸ்லீம் வரலாற்றாய்வாளர்களை கொண்ட குழுவின் மூலம் உன்மையானதும் சரியானதுமான வரலாற்றை மாணவர்களுக்கு வழங்கவேண்டும். மகாவம்சம் என்பது வரலாறு அல்ல ஆகவே பாடசாலை மாணவர்களுக்கான வரலாற்று நூல்கள் இந்த நாட்டின் புரதான நாகரீகம் தொடக்கம் இன்றைய நிலை வரையான உன்மையான வரலாற்றினை வெளிப்படும்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். 

வவுனியா தெற்கு வலயத்தின் செட்டிகுளம் கோட்டத்தில் 35பாடசாலைகள்  இயங்கி வருகின்றன  அனைத்தும் அதிக கஸ்டப்பாடசாலைகளாகும்  நீண்ட காலமாக  போதிய ஆசிரியர்கள் இன்மையால்   மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஆரம்பக்கல்வி  கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம். தகவல் தொழிநுட்பம் போன்ற பாடங்களை கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. போக்குவரத்து இடர்பாடுகள் அதிகம் இதனால் ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். 

செட்டிகுளம் மிகப் பரந்த பிரதேசமாகவும்  கல்வியில் நீண்டகாலமாக பின்தங்கியும் காணப்படுகிறது ஏறத்தாழ 7ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். அவர்களின்  கற்றலுக்கான வளங்கள் தொடர்ச்சியாக  பற்றாக்குறையாகவே உள்ளன.  இதனால் பலமாணவர்கள் செட்டிகுளத்தில் இருந்து 40கிலோமீற்றர் தூரத்திலுள்ள வவுனியா நகரத்திற்கும் மன்னார் பிரதேச பாடசாலைகளுக்கும் சென்றுவருகின்றனர் பலமாணவர்கள் தமது உறவினர்களின் வீட்டில் தங்கி இருந்து கல்வி கற்கின்றனர் 

இதனால் பெற்றோரும் கல்வியில் அக்கறை கொண்ட நலன் விரும்பிகளும் கல்வி நிலை தொடர்பாக தமது விசனத்தை தெரிவித்து வருகின்றனர் எனவே செட்டிகுளம் பிரதேசத்தை மையமாகக் கொண்டு அதனை தனியான கல்விவலயமாக தரமுயர்த்த வேண்டிய  நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த வரவு-செலவுத் திட்டத்திலும் கல்விக்கான ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 

வடக்கு-கிழக்கில் இன்னமும் சில பாடசாலைகள் குடிசைகளில் இயங்கிவருகின்றன. பாடசாலை அதிபரின் வெற்றிடங்களை நிரப்புகையில் முறையான வகையில் விண்ணப்பம் கோரப்படவேண்டும். மாணவர்களுக்கான சுரக்க்ஷா காப்புறுதி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இது மாணவர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. அதிபர் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் உரிய காலத்தில் வழங்கப்படாமல் உள்ளது.

தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்திற்கு அரசு உரிய பதிலையும் பரிகாரத்தையும் வழங்காமையாலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள்  என்று தம்மைதாமே கூறிக்கொள்பவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளை உரிய முறையில் அணுகாததினாலும் பல்கலைக்கழக மாணவர்கள் மக்களின் போராட்டத்தை தமது கைகளில் எடுத்துள்ளனர். 

எனவே இனியேனும் காலம் தாழ்த்தாது இந்த அரசு தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காண்பதற்கும் உரிய முறையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கும் முன்வரவேண்டும் என்றார்.