Jul 05

படுக்கையில் வைத்து கர்ப்பிணி பெண் மீது துப்பாக்கிச் சூடு: ரொரன்ரோவில் பயங்கரம்

ரெக்ஸ்டேல் பகுதியில் அமைந்துள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு வீடு ஒன்றினுள் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், கர்ப்பிணியாக இருந்த யுவதி ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

ஸ்டீல்ஸ் அவனியூவுக்கு தெற்கே, கிப்ளிங் அவனியூவில் அமைந்துள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பின் 14ஆவது தளத்தில் உள்ள வீடு ஒன்றிலேயே நேற்றுஅதிகாலை 1.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டினுள் நுளைந்த இனந்தெரியாத நபர் ஒருவர், படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த இவர்கள் இருவர் மீதும் பலமுறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், ஏனைய அறை ஒன்றினுள் இருந்த சிறுவர்கள் இருவருக்கு எந்தவித காயங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் 20 வயது பெண் மற்றும் 23 வயதுடை ஆண் எனவும்,, உடனடியாகவே மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அவர்கள் இருவரும் உயிர் பிழைப்பார்க்ள என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த பெண் 11 வாரங்கள் கர்ப்பமாக உள்ள நிலையில், அவரது வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பில்லை என்று நம்பப்படுவதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் குண்டர் கும்பல்களின் தொடர்பு இருக்கக்கூடும் எனவும், இலக்கு வைக்கப்பட்டே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள காவல்த்துறையினர், காயமடைந்த ஆண் ஏற்கனவே வேறு பல குற்றச் செயல்களில் தேடப்பட்டுவந்த நபர் எனவும், மருத்துவமனையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.