Jul 05

கனேடிய பிரதமர் ஒரு வாரம் ஐரோப்பா பயணம்

G20 மாநாட்டில் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு சந்திப்புகளுக்கான அரசுமுறைப் பயணமாக, பிரதமர் ஜஸ்டின் ரூடோ ஐரோப்பாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

உலகின் 20 பொருளாதார வள நாடுகள் ஒன்றுகூடும் G20 நாடுகளின் மாநாடு எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை யேர்மனியின் ஹம்பேர்க் நகரில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வது உட்பட மேலும் பல சந்திப்புக்களை நடாத்த திட்டமிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, ஐரோப்பாவுக்கான தனது ஒரு வார பயணத்தினை ஆரம்பித்துள்ளார்.

யேர்மனிக்கு செல்வதற்கு முன்னதாக டப்ளினுக்கு செல்லவுள்ள பிரதமர், அங்கு சீட்டா எனப்படும் கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

அங்கிருந்து ஸ்கொட்லாந்துக்கு செல்லும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அங்கு மகாராணியாருடன் இணைந்து, கடனாவின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட விழா ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளார்.

91 வயதினை எட்டியுள்ள மகாராணியார் ஒட்டாவாவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்கு பிராயாணம் செய்யமுடியாது இருந்தமையால், குறித்த இந்த கொண்டாட்ட நிகழ்வு ஸ்கொட்லாந்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.