Jul 05

துருக்கி: கோர்ட் வளாகத்தில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு - போலீசை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை

துருக்கி நாட்டில் கோர்ட் வளாகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர், போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

துருக்கி நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள முக்கிய நகரான பர்சாவில் இருக்கும் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மாலை மர்மநபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.

கோர்ட் வளாகத்தின் வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரியை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனால், அங்கிருந்தவர்கள் சிதறி ஓட ஆரம்பித்தனர். இதனையடுத்து, அதே துப்பாக்கியால் அந்த நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தீவிரவாத தாக்குதலாக இது இருக்குமோ? என்ற கேள்வி எழுந்த நிலையில், அம்மாகாண காவல்துறை அதை மறுத்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக, அந்த மர்மநபர் ஏற்கனவே, ஒரு வழக்கறிஞரை பிணையக் கைதியாக பிடித்து வைத்துள்ளதாக ஹுரியத் செய்தித்தாள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.