Mar 23

யாழ்.நகரை தந்திரோபாய நகரமாக மாற்றியமைக்க உலகவங்கி அனுமதி; முதலமைச்சர் சி.வி

யாழ்ப்பாண நகரத்தை தந்திரோபாய நகரமாக மாற்றி அமைப்பதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதுவரை காலமும் பூர்வாங்க வேலைகள் முடிவடைந்துள்ளதுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 வடமாகாண முதலமைச்சரது அலுவலகத்தில் யாழ்ப்பாண நகரை தந்திரோபாய நகரமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் உலக வங்கி பிரதிநிதிகளுடன் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண நகரை தந்திரோபாய நகரமாக அபிவிருத்தி செய்வதற்கான உலக வங்கி பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்கள். இவர்களுடைய கலந்துரையாடலில் இந்த 5 ஆண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை காலமும் பூர்வாங்க வேலைகள் நடைபெற்று முடிந்துள்ளது குறிப்பாக நான்கு முக்கிய விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது தொடர்பிலும் வடிகால்களை அமைத்து அதன் மூலம் மேம்பாடு மற்றும் கலாச்சார மையங்களை செயற்படுத்தல் மற்றும் வீதிப் போக்குவரத்து தொடர்பில் பருத்தித்துறையிலிருந்து கொடிகாமம் வரையிலான வீதியை அகலமாக்கி அபிவிருத்தி செய்தல் AB 31, யாழ்ப்பாணத்திலிருந்து பொன்னாலை வரையிலான FB21 வீதியை அகலித்து அபிவிருத்தி செய்தல் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 வடிகால்கள் அமைக்கும்போது யாழ்.நகர மையத்தில் உள்ள குளங்கள் புனரமைக்கப்படவுள்ளது குறித்த குளங்கள் தூர்வாரப்பட்டு அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும் யாழ்.நகரிலுள்ள பழைய பூங்கா கட்டடம் மந்திரி மனையையும் பழமையையும்புதுமையையும் ஒருங்கிணைந்த கட்டடமாக அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.