Mar 23

இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும்

இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டும் என்றும் காலஅவகாசம் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.

 

பொது அமைப்புக்கள் மனித உரிமை ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 11 விடயங்களை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களாக,

இந்தத் தீர்மானத்தைப் பிற நாடுகளுடன் சேர்ந்து கூட்டாக முன்மொழிந்தது சிறிலங்கா. ஒன்றரை ஆண்டுக் காலத்தில், அதாவது 2017 மார்ச் மாதத்திற்குள் தன் கடப்பாடுகளை நிறைவேற்றவும் அது முழுமையாகப் பொறுப்பேற்றது.

 

இந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் சிறிலங்கா அரசாங்கம் தன் கடப்பாடுகளை நிறைவேற்ற உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல, சிறிலங்காக் குடியரசுத் தலைவரும் மற்றத் தலைவர்களும் தீர்மானத்தின் முதன்மைக் கூறுகளை விசாரணைகளில் பன்னாட்டு நீதிபதிகளை இடம்பெறச் செய்வது உள்ளிட்டவற்றை பகிரங்கமாகத் திரும்பத் திரும்ப நிராகரித்துமுள்ளார்கள்.

 

இந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்தன என்பதைப் பல அறிக்கைகள் ஆவணப்படுத்தியுள்ளன. இவற்றுள் ஒன்று சித்திரவதை பற்றிய ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் யுவான் மெண்டிஸ் அண்மையில் அளித்த அறிக்கையாகும்.

பன்னாட்டு உண்மை மற்றும் நீதித் திட்டம் அண்மையில் தந்த அறிக்கை சிறிலங்கா இராணுவம் நடத்தும் 'பாலியல் வல்லுறவு' முகாம்கள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தியது. இந்த முகாம்களில் தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்துள்ளனர்.

 

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியப் பேரரசின் இராணுவம் பெரும்பாலும் கொரியர்களும் சீனர்களுமான பெண்களை 'சுகபோகப் பெண்களாக' வைத்திருந்த காலத்துக்குப் பின், அரிதில் ஆவணப்படுத்தப்பட்ட பாதுகாப்புப் படைகளின் 'வல்லுறவு முகாம்களில்' இவையும் அடங்கும்.

 

காணாமல் போகச் செய்யப்பட்ட எங்கள் புதல்விகளில் சிலர் இந்த 'வல்லுறவு முகாம்களில்' வைக்கப்பட்டிருப்பார்களோ என்று அஞ்சுகிறோம்.

இப்போது ஒரு 'மறுசுழல் தீர்மானத்தின்' வாயிலாக சிறிலங்காவுக்கு மேலும் ஈராண்டுக் கால நீடிப்பு தர முயற்சிகள் செய்யப்படுகின்றன.

 

இந்த 'மறுசுழல் தீர்மானத்தின்' முதன்மைக் கூறாகிய, விசாரணைகளில் அயல்நாட்டு நீதிபதிகளைச் சேர்த்துக் கொள்வது என்பதை ஏற்கெனவே சிறிலங்காவின் அதிபரும் பிரதமரும் பகிரங்கமாக நிராகரித்துள்ளார்கள்.

 

அரசாங்கமே 'மறுசுழல் தீர்மானத்தின்' முதன்மைக் கூறினை நிராகரிக்கிறது என்றால், அதே அரசாங்கம் இந்த 'மறுசுழல் தீர்மானத்தைச்' செயலாக்கும் என்று ஐ.நா மனித உரிமை மன்றம் எப்படி எதிர்பார்க்கலாம்?

 

மேலும், சிறிலங்கா முந்தையத் தீர்மானத்தின்படி தன் கடப்பாடுகளை நிறைவேற்ற உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை ஆதலால், இந்த 'மறுசுழல் தீர்மானம்' மட்டும் செயலாக்கப்படும் என்று ஐ.நா மனித உரிமை மன்றம் எப்படி எதிர்பார்க்கலாம்?

 

எங்கள் புதல்விகளையும் குடும்பத்தினரையும் கொன்றும், காணாமல் போகச் செய்தும், பாலியல் வன்செயலுக்கு ஆளாக்கியும் கொடுமைகள் செய்த பத்தாயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் இன்றளவும் எம்மிடையே நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

கால நீடிப்பு ஏதும் தரப்படுமானால், எமக்கும் தமிழ் மக்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்றும், அது எமக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராகக் கொடுமைகள் செய்ய சிறிலங்கப் பாதுகாப்புப் படைகளுக்குத் துணிச்சல் கொடுப்பதாகி விடும் என்றும் அஞ்சுகிறோம் என்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.