Jul 04

வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் உதைபந்தாட்ட போட்டியில் 786 இளைஞர் கழகம் சம்பியனானது!!

தேசிய கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்தும்  வருடாந்த தேசிய  விளையாட்டு விழாவின் பெரு விளையாட்டுகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 

அந்த வகையில் வவுனியா மாவட்டத்தின் உதைப்பந்தாட்ட  இறுதி போட்டி 02.07.2017 அன்று  வவுனியா நெளுக்குளம் ஊர்மிளா கோட்டம் இளைய நிலா இளைஞர் கழக மைதானத்தில் நடைபெற்றது. 

நேற்றைய இறுதி போட்டியில் வவுனியா பிரதேச மட்டத்தில் சம்பியனான 786 இளைஞர் கழகமும் செட்டிகுளம் பிரதேச மட்டத்தில் தெரிவான சென்.அன்ரனிஸ் இளைஞர் கழகமும் மோதியது. இப் போட்டியில் 1-0 எனும் கோல் வித்தியாசத்தில் வவுனியா பிரதேச சம்பியன் அணியான  786 இளைஞர் கழகம் வெற்றியீட்டியது.

மேற்படி 786  இளைஞர் கழகத்தினுடைய விளையாட்டுக் கழகத்தின் உதைப்பந்து  அணியானது  வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் கடந்த 02 வருடங்களாக தடை உத்தரவு வழங்கப்பட்டிருப்பதுடன், அந்த தடை உத்தரவு தொடர்ந்த வண்ணம் உள்ளதுடன் பல இளம் வீரர்களின் திறனும் முடக்கப்பட்டிருப்பதாக இளைஞர்கள் பலர் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் 786 கழகம் தடைசெய்யப்பட்டிருந்தாலும்  தேசிய கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் தேசிய  இளைஞர் காற்பந்தாட்ட போட்டிக்கு விளையாடுவதற்கு 786 இளைஞர் கழகத்திற்கு  தகைமை  அடிப்படையில்  வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருந்தது.

அதனடிப்படையில் 786 கழகமானது வவுனியா பிரதேச மற்றும் மாவட்ட சம்பியனை தனதாக்கி கொண்டு தேசிய மட்டத்திற்கு  தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த கழகத்தின் திறமையையும் வீரர்களின் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு இவர்களுக்கான தடை உத்தரவை மிக விரைவில் நீக்குமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.

அரசியல் பின்னணிகளினாலும், தனிப்பட்ட நபர்களின் சுயலாபத்திற்காகவும் வவுனியாவில் பல கழகங்கள் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

விளையாட்டின் மூலம் சமாதானம் மற்றும் அமைதி ஏற்படுத்தப்பட்டு விளையாட்டு வீரர்கள் இடையே நட்பும் ஒற்றுமையும் வளர்க்கப்பட வேண்டுமே தவிர வீரர்கள் மத்தியிலும் கழகங்கள் இடையிலேயும் விரோதங்களும் பகைகளும் வளர்க்கப்படக்கூடாது.

இளைஞர்களின் திறன்களை வெளிக்கொணர புதுமுக வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும் எனவும் வவுனியா மாவட்டத்தின் விளையாட்டுத் துறையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு சமூக அமைப்புக்கள், விளையாட்டுத் துறை சார்ந்த பொது அமைப்புக்கள் செயற்படவேண்டும் என  பல விளையாட்டு விமர்சகர்களும் கல்விச் சமூகமும் பகிரங்கமாக கேட்டுக்கொண்டனர்.