Jul 03

பிரிட்டிஷ் கொலம்பியாவின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்: பிரதமர்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிதாக ஆட்சி அமைக்கும் புதிய சனநாயக கட்சி அரசுடன், மத்திய அரசும் இணக்கமாக பணியாற்றும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் அகற்றப்பட்டுள்ள நிலையில், பசுமைக் கட்சியுடன் இணைந்து புதிய சனநாயகக் கட்சி அங்கு ஆட்சி அமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, ஜோன் ஹோர்கனின் தலைமைத்துவத்தின் கீழ் புதிய சனநாயக கட்சி பிரிட்டிஷ் கொலம்பியாவில் அரசாங்கத்தினை அமைக்கும் என்று கூறியுள்ளார்.

அந்த வகையில் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஒட்டுமொத்த கனேடியர்களுக்கும் நன்மையளிக்கும் வகையில், புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள ஜோன் ஹோர்கனுடன் தாம் இணக்கமாக பணியாற்றவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இணைந்து பணியாற்றுவதன் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் நலன்களை மேம்படுத்தும் வகையில், அங்கு தொழில்த்துறை உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பழங்குடியின மக்களின் உரிமைகளை மதிக்கும் வகையில், பழங்குடியின மக்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஆகியவற்றை பிரிட்டிஷ் கொலம்பியாவின் புதிய முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதற்கு மத்திய அரசும் துணை நிற்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இதுவரை முதல்வராக இருந்து, பிரிட்டிஷ் கொலம்பிய மக்களுக்கும், ஒட்டுமொத்த கனடாவுக்கும் சேவையாற்றிய “கிறிஸ்டி கிளார்க்” ற்கும் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ மேலும் தெரிவித்துள்ளார்.