Mar 07

தமிழீழ விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட மண் பல வழிகளில் அபகரிப்பு!

நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சியுடன் தமிழர்கள் ஈழப் போரின் மிக மோசமான அழிவுகளையும், ஆக்கிரமிப்புக்களையும் சந்தித்த கிராமங்களை சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம்கள் எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட பின்னர் தமிழர் அடையாளங்கள் அழிக்கப்பட்டுவருகிறது.

தொடர்ச்சியாக இலங்கைத் தீவில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் குறிப்பாக 1972 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் பின்னர் தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதும், அதிகரித்த வன்முறைகள், களவு, கொள்ளை போன்றன தமிழர்களை எல்லைக் கிராமங்களில் இருந்து வெளியேறினர்.

அதுமாத்திரமின்றி, இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, படுகொலை சம்பவங்களினால் மக்கள் எல்லைக் கிராமங்களை விட்டு முற்றாகவே வெளியேறியிருந்தனர். இவ்வாறு தமிழ் மக்கள் வெளியேறிய கிராமங்கள், விரைவாக சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம்கள் வசமாகின.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் மக்களின் பாரம்பரிய பூர்வீக கிராமங்களான கறுவாச்சோலை, கெவிளியாமடு, புளுக்குணாவ, கச்சக்கொடிசுவாமிமலை போன்ற கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேறிய நிலையில் திட்டமிட்டவகையில் சிங்களவர்கள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

தமிழ் கிராமங்களின் பெயர்கள் சிங்களப் பெயர்களும் முஸ்லீம் பெயர்களுமாக மாற்றம்செய்யப்பட்டன.

போர் தொடங்கிய காலத்தில் தொடங்கிய இந்த வேலைத்திட்டம், போர் முடிந்த பின்னரும் நீடித்திருக்கிறது.

கறுவாச்சோலையில் 1983 இல் 105 தமிழ் குடும்பங்கள் இருந்ததாகவும் தற்போது ஒரே

யயாரு குடும்பம் மாத்திரம் உள்ளது. ஏனையவர்கள் களுதாவளை, தேற்றாத்தீவு போன்ற ஊர்களுக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள்.

இதேபோன்று கெவுளியாமடுவிலும் ஒரு தமிழரும் இல்லை. இங்கு தற்போது 345 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருக்கிறது. இதை பயன்படுத்தி கெவுளியாமடுவில் இரு விகாரைகளும், புளுக்குணாவையில் ஒரு ராஜ விகாரையும் கட்டப்பட்டுள்ளது.

கச்சக்கொடிசுவாமிமலையில் 65 குடும்பங்கள் மாத்திரமே இருக்கின்றார்கள். ஆனால் அங்குள்ள வயல்கள் தமிழர்களுக்கு சொந்மானவைகள். பருவகாலத்தில் சில தமிழர்கள் சென்று வயல் செய்கின்றனர். ஆனால், காணிச் சொந்தக்காரர்கள் அங்கு சென்று முன்புமாதிரி குடியிருக்காவிட்டால் காணிகள் பறிபோகும் அபாயம் காணப்படுகிறது.

எல்லையை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் காணிச் சொந்தக்காரர்களை குடியேற்ற வேண்டிய தேவை உள்ளது.

அப்படியானால் அங்குவாழ்வதற்கான அடிப்படைவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவையும் உள்ளன.

அத்தோடு சிங்கள மக்கள் தம் மத்தியில் செல்வாக்குமிக்க பெரும்பான்மை கட்சிகளைத் தவிர்த்து பிறருக்கு வாக்களிப்பதில்லை. அத்துடன் தம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதிலும் பின்நிற்பதில்லை. இதனை விளங்கிக் கொண்டே புதிதாக குடியேற்றப்பட்டுள்ள சிங்கள வாக்காளர்களைத் தம்வசம் இழுக்கும் நோக்குடன், ஆட்சிக்கு வரும் பேரினவாத சக்திகள் தமிழர் பகுதியில் குடியேற்றங்ளை முன்னெடுப்பதுடன், அதிக சலுகைகளையும் அவர்களுக்கு வழங்குகின்றனர்.

மறுபுறத்தில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கள மீள்குடியேற்றம், தமிழ் பெயருடன் அழைக்கப்பட்டு வரும் இடங்களுக்கு சிங்களத்தில் பெயரும் மாற்றப்படுகிறது.

அத்துடன், அவர்களுக்கான காணி உறுதி பத்திரங்களும் வழங்கப்படுகிறது. ஆனால் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் தமிழ் கிராம மக்களுக்கு இன்றுவரை காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை.

அதனால் அந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். இதனை தமிழ் அரசியல்வாதிகளும் கண்டுகொள்வதில்லை என்றுதான் கூறவேண்டும்.

இதுவரை காலமும் தமிழர்கள் வசமிருந்த பிரதேச சபைகளுக்குள் பெரும்பான்மையினர் நுழைந்திருப்பதும், பிரதேச சபையே அவர்களின் வாக்குப் பல அதிகரிப்பின் காரணமாக, பெரும்பான்மைவயப்படவிருக்கும் சம்பவங்களும் நடக்கவிருக்கின்றன.

கிழக்கில் இன்றும் கண்முன் இடம்பெறும் அபகரிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் இருக்கின்ற தென்னமரவடி கிராமம். ஜனநாயத்தை மீட்பதற்காக நாட்டின் பிற பாகங்களில் உள்ள மக்கள் பதைபதைத்துக் கொண்டிருந்ததைப் போல தென்னமரவடி கிராம மக்கள் தங்கள் பூர்வீகக் கிராமத்தைக் காப்பதற்குப் பதறிக்கொண்டிருந்தனர்.

தமிழர் வரலாற்றுடன் தொடர்புடைய இக்கிராமத்தில் உள்ளவர்கள் பூர்வீகமாக காணி உறுதி பெற்று வாழ்ந்தமைக்கு கூட அவர்களிடம் ஆதாரங்கள் உண்டு.

பிரித்தானியரால் வழங்கப்பட்ட காணி உறுதிகளை இன்றும் வைத்திருக்கின்றனர்.

அம்பாறை என்றால் அழகிய பாறை என்று அர்த்தம். ஈழத்தில் உள்ள தமிழ்ப் பெயர்களில் மிகவும் செம்மையானதொரு பெயர் அம்பாறை. மிகவும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அம்பாறை தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்த பூமி. தமிழ் மக்களின் தாயகப் பகுதியில் மிகவும் தொன்மையான பல ஆலயங்களையும் செழுமையான பாரம்பரியங்களையும் கொண்டு அமைந்திருக்கிறது .

அம்பாறை. சிங்கள அரசுகள் முன்னெடுத்த குடியேற்றத் திட்டங்களின் மூலம் தமிழ் மக்கள் நிலங்களை இழந்தார்கள்.

1950களுக்குப் பின்னர் சிங்கள அரசுகள் முன்னெடுத்த தீவிர நில ஆக்கிரமிப்புத் திட்டத்தில் அதிகம் பலியானது அம்பாறை. பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழ் மக்கள் விரட்டப்பட்டு அவர்களின் காணி நிலங்கள் அபகரிக்கப்பட்டு இன்று தமிழர்கள் சிறுபான்மையராக வாழும் மாவட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மீதான சிங்கள ஆதிக்கம் இன்று நேற்று நடக்கவில்லை. வரலாறு முழுவதும் நடந்திருக்கிறது.

பண்டைய காலத்திலேயே அம்பாறை மீது சிங்கள மன்னர்களின் படையயடுப்பும் ஆக்கிரமிப்பும் பல தடவைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. தமிழரின் தொன்மை மிகுந்த அம்பாறைப் பிரதேசத்தை சிங்கள மன்னர் ஆக்கிரமித்து தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

தமிழர்கள் பரந்து விரிந்து மிக நெடிய காலம் முதல் புராதனமாக வாழ்ந்து வரும் நிலையில் அதனை சீர்குலைக்கும் வகையில் சிங்கள அரசின் ஆதிக்கச் செயற்பாடுகள் இடம் பெற்றுள்ளன.

அம்பாறையில் பட்டிப்பளை ஆறு என்ற தமிழ் பெயரே கல்லோயா என சிங்களத்தில் மாற்றப்பட்டது.

1949இல் கல்லோயா நீர்ப்பாசனத் திட்டம் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்காக தொடங்கப்பட்டது. நிலங்களற்ற உழவர்களுக்கு காணி வழங்குகிறோம் என்று கூறிக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் பட்டிப்பளை ஆற்றின் அருகில் அணைக்கட்டு கட்டப்பட்டு சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம்கள் குடியேற்றப்பட்டார்கள்.

நாற்பதாயிரம் ஏக்கரில் நடைபெற்ற இந்தக் குடியேற்றத்தில் 50 வீதமான சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். நாற்பது சிங்கள ஊர்கள் உருவாக்கப்பட்டன. இந்தக் குடியேற்றத்திட்டம் சிங்கள - தமிழ் முரண்பாடுகளுக்கும் கலவரங்களுக்கும் வித்திட்டது.

1948 இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்பாகவே தமிழர்களின் பூமியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை சிங்களவர்கள் தொடங்கியிருந்தனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் தங்கள் நிலங்களை இழந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சுதந்திரத்திற்கு பின்பும் ஒரு வருடத்திலேயே அம்பாறையை சிங்கள அரசுகள் கூறப்போட்டு தமிழர் தாயகம் அல்லது தமிழர் தேசம் என்ற கனவை சிதைக்கத் தொடங்கின.

டி.எஸ்.சேனநாயக்காவினால் முன்னெடுக்கப்பட்ட கல்லோயா திட்டத்திற்கு இஸ்லாமிய அரசியல்வாதிகளும் ஒத்துழைத்தனர். குறித்த குடியேற்றத் திட்டம் ஊடாக மாபெரும் இனப்படு

கொலைக்கு சிங்கள அரசு வித்திட்டது.

1956ஆம் கொழும்பில் இனக் கலவரம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் சிங்கள பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்டன.

கல்லோயாவில் குடியேற்றத்திட்டத்தின் மூலம் இன முரண்பாடுகள் ஊக்குவிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள தமிழர்களை விரட்டியடித்து காணிகளை அபகரிக்க இனப் படுகொலை நிகழ்த்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைந்திருந்த அம்பாறைப் பிரதேசத்தை சிங்களக் குடியேற்றத்திற்காகவும் தமிழர் தாயகத்தை பலவீனப்படுத்தவும் சிங்கள ஆதிக்கத்திற்காகவும் தெற்கின் சில கிராமங்களை இணைத்து தனி மாவட்டமாகவும் தனி தேர்தல் தொகுதியாகவும் மாற்றியது சிறீலங்கா அரசு.

1961ஆம் ஆண்டில் அம்பாறை தனி மாவட்டம் ஆக்கியது முதல் தொடர்ச்சியாக சிங்களவர்களே அரச அதிபராகவும் பிரதேச செயலாளர்களாகவும் அரசால் நியமிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் மேலதிக அரச அதிபர்களாகவும் பிரதேச செயலாளர்களாகவும் கடமையாற்றிய தமிழர்களுக்கு தமது பணிகளை ஆற்ற அனுமதிக்கப்படவில்லை. அரசியல் துன்புறுத்தல்கள் நிகழ்த்தப்பட்டு இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.

அத்துடன் அரச திணைக்களங்களில் சிங்கள இனத்தவர்களே அதிகம் நியமிக்கப்படுகின்றனர். இவைகள் யாவும் திட்டமிட்ட குடியேற்றத்திற்கு ஏற்பவே செய்யப்படுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் அரசியல் தலைவர்களும் காணி அபகரிப்பை ஊக்குவிக்கின்

றனர். சிங்கள அரசு எவ்வாறு அரசியல் காரணங்களுக்காக காணி அபகரிப்பை முன்னெடுக்கிறதோ அவ்வாறே, முஸ்லீம் தலைவர்களும் தமது  அரசியல் இருப்பை பெருக்கிக்கொள்ள தமிழர் நிலங்களை அபரிக்கின்றனர்.

அம்பாறையின் வட எல்லையான பெரிய நீலாவணையில் தமிழர்களின் பூர்வீக காணிகளை முஸ்லீம்கள் அபகரித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட மண் இன்று பல வழிகளில் அபகரிக்கப்படுகிறது. தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை அழித்து தமிழ் தேச ஆட்சிக்  கோரிக்கையை முறியடித்து தமிழர்  நிலங்களை அபகரித்து அவர்களின் தாயகப் பரப்பை ஆக்கிரமிப்பதும் ஆள்வதுமே இதன் நோக்கமாகும்.

தமிழர் தொடர்ந்து விழிப்புடன் வாழவும் போராடவும் தலைப்படாத பட்சத்தில் ஒட்டுமொத்த தமிழ் தாயகத்திற்கும் இதே நிலைதான் நடக்கும் என்பதை ஈழ மக்கள் உணரவேண்டும்.

‘கிழக்கில் இருந்து’ எழுவான்