Mar 05

இப்படியெல்லாம் நடக்கிறது! புதிய எனது அனுபவம்! கிறீஸதவ தேவாலயத்தில் தேவாரமும் - ஜோதிப் பாடலும் பாடிய எனது மறக்க முடியாத அனுபவம்!

பதிவிடத் தொடங்கி சரியாக ஒரு வருடம் நிறைவுபெறும் இந்த July மாதத்தில் தற்போது சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் எனக்கு ஏற்பட்ட இந்த மறக்க முடியாத சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டேயாக வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதிகிறேன்.

நாம் இருக்கிற இந்த மாவட்டத்தின் தலைநகரம் சுவிற்ச் (Schwyz) என்று அழைக்கப்படுகிறது. நாட்டை சுவைற்ச் (Schweiz) என்பார்கள் - உச்சரிப்பிலே சிறிது தடுமாற்றம் வந்தே தீரும். எமது மாவட்டத்தின் பெயரும் சுவிற்ச்தான் (Schwyz). அழகிய மலைப்பிரதேசம் - ஏரிகள் காடுகள் குடிமனைகள் என்று பரந்து இருக்கிறது. இங்கு சைவக் கோவில்கள் எதுவுமில்லை. தமிழர்களும் அதிகமில்லை. எனவே நாம் கோவிலுக்குப் போவதென்றால் அருகில் இருக்கும் சுக்(Zug) அல்லது லுசேர்ன் (Luzern) அல்லது சூரிக் (Zürich ஆங்கிலத்தில்தான் சூரிச்) இங்குள்ள கோவில்களுக்குத் தான் போக வேண்டும். ஆனால் எமது மாவட்டத்திலுள்ள கறுப்பு மேரி மாதா ஆலயம் பிரசித்தி பெற்றது. நாம் முகாமிலிருந்த ஏழரை மாதக் காலப் பகுதியில் ஒவ்வொரு செவ்வாயும் இந்த தேவாலயத்திற்குச் சென்று வருவது வழக்கம்.

நான் சுவிற்ச்லாந்துக்கு வந்தது 19.04.2007இல் - 23இல: முகாமில் சென்று பதிந்தபின் மே 4இல் இந்த மாவட்டத்திற்கு என்னை மாற்றினார்கள். இங்குள்ள மோர்ஷாஹ் என்ற முகாமில்தான் இடுத்த ஏழரை மாதங்கள் வாசம். அப்போது எம்மிடம் அடிக்கடி வந்து செல்லம் இராஸன் அண்ணா ஒரு நாள் வந்து ஒரு நிகழ்வு நடப்பதாக எம்மை அழைத்துப் போனார். என்ன நிகழ்வு என்றால் இந்த குறிப்பிட்ட தேவாலயத்திற்கு ஏன் அதிகமான இலங்கையர்கள் வருகிறார்கள் என்ற ஒரு சிறிய பரிமாற்ற நிகழ்வு.

நான் சுவிற்ச்லாந்துக்கு வந்தது 19.04.2007இல் - 23இல: முகாமில் சென்று பதிந்தபின் மே 4இல் இந்த மாவட்டத்திற்கு என்னை மாற்றினார்கள். இங்குள்ள மோர்ஷாஹ் என்ற முகாமில்தான் இடுத்த ஏழரை மாதங்கள் வாசம். அப்போது எம்மிடம் அடிக்கடி வந்து செல்லம் இராஸன் அண்ணா ஒரு நாள் வந்து ஒரு நிகழ்வு நடப்பதாக எம்மை அழைத்துப் போனார். என்ன நிகழ்வு என்றால் இந்த குறிப்பிட்ட தேவாலயத்திற்கு ஏன் அதிகமான இலங்கையர்கள் வருகிறார்கள் என்ற ஒரு சிறிய பரிமாற்ற நிகழ்வு.

அன்று 26.08.2007 எனது பெரிய தந்தையாரின் பிறந்த நாள். சரி என்று காலை 10.00 மணியளவில் நாம் ஒரு பாடசாலையில் நடைபெற்ற முதல் நிகழ்வில் கலந்து கொண்டோம் எமது மாவட்டத்திலிருக்கின்ற தமிழர்களும் - சுவிஸ நாட்டவருமாக சுமார் 80பேர் இந் நிகழ்வில் கலந்த கொண்டார்கள். விவரணப் படஙஇகள் கருத்துரைகள் பரத நாட்டிய நிகழ்வுகள் சுவிஸ நாட்டவரின் இசை என்று பல நிகழ்வுகள் நடைபெற்ற பிறகு இரு நாட்டவரும் எதிரெதிராக அமர்ந்து இலங்கை உணவு அருந்திüனோம். அறிமுகங்கள் மற்றம் நட்பு ரீதியில் இந்த நிகழ்வைத் தொடர்ந்து அருகிலிருந்த கிறீஸ்தவ தேவாலயத்தில் ஒரு பிரார்த்தனை இருக்கிறது என்று அழைத்துப் போனார்கள் - அருகிலிருந்தபடியாலஇ எல்லோரும் நடந்தே சென்றோம். நகரின் மத்தியில் அமைந்திருந்த இந்த தேவாலயத்தள் போனதுமே எனக்கு தூக்கி வாரிப் போட்டது. தேவாலயத்தின் பீடத்திற்கு முன்பாக பிள்ளையார் மகாலட்சுமி முருகனுடைய படங்கள் வைக்கப்பட்டிருந்தன. 

எல்லோரும் வந்த அமர்ந்ததும் என்னை வந்து கேட்டார்கள் தேவாரம் பாடுவீர்களா என்று? ஓம் என்று சொன்னேன். வணக்கத்திற்குரிய பாதிரியார் தமது வழிபாடுகளை முடித்துக்கொண்டு என்னை அழைத்தார். 

3 தடவைகள் பிரணவ மந்திரத்தை ஒலிபெருக்கியில் இசைத்தபோதே அதிர்வு கொண்ட தேவாலயத்தில் மெய்யுருகி தேவாரத்தையும் புராணத்தையும் வாழ்த்தையும் இசைத்து முடித்தேன். நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று முடிந்த பிறகு பங்குபற்றிய அனைவருமே வந்து பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்கள். சிறு வயதிலேயே கொஞ்சம் சங்கீதம் கற்றதனால் ஓரளவு பாட முடியும். நிகழ்வில் கலந்த கொண்ட இன்னொரு பாதிரியார் தமது இடத்தில் நடைபெறப் போகும் ஒரு நிகழ்வில் என்னை வந்து பாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். (மீதி பின்னர்)

இப்படியெல்லாம் நடக்கிறது! புதிய எனது அனுபவம்! கிறீஸதவ தேவாலயத்தில் தேவாரமும் - ஜோதிப் பாடலும் பாடிய எனது மறக்க முடியாத அனுபவம்! பாகம் 2

நான் தற்போது இருக்கும் இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்திலுள்ளது இம்மன்சே(Immensee) என்ற இடம். இங்கேதான் எனது இரண்டாவது நிகழ்வு இடம்பெற்றது. 50பேர்வரை அந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர். இதுவும் ஒரு கிறீஸ்தவ தேவாலயத்தில் நடந்தது. லுசேர்னில் இருந்து பரத நாட்டிய நிகழ்வை நடத்த ஒரு நாட்டியக் குழுவினரும் வந்து இருந்தனர். என்னை நிகழ்வுக்கு அழைத்துப்போக (ஏற்கனவே கடிதப்பரிமாற்றங்கள் மூலம்) புகையிரத நிலையத்திற்கு தனது வண்டியில் வந்த காத்திருந்தார் வணக்கத்திற்குரிய பாதிரியார் பௌல் ஏர்லர் (Paul Ehrler)அவர்கள்.

நிகழ்வுகளில் முதல் பாதிரியார் டொச் மொழியில் தனது ஆராதனையை நிகழ்த்திய பின்னர் என்னைப் பாடுமாறு அழைத்தார். இலங்கையிலிருந்து எடுத்தச் சென்ற சிவயோக சுவாமிகளின் நற்சிந்தனையில் இருந்து இம்முறை பாடல்களை நான் பாடினேன்! எனது பாடலுக்குப் பின்னர் மீண்டும் அவரது உரை. அதன்பின் நாட்டியம். பின்னர் அவரது உரை. அதன் பின்னர் எனது பாடல். இப்படி மாறிமாறி அந்நிகழ்வு நடைபெற்றது. இதன்பின்னர் மதிய போசனம் இடம்பெற்றது. அதன்பின்னர் என்னை தானே மீண்டும் அழைத்துவந்து வழியனுப்பி வைத்தார் வணக்கத்திற்குரிய பாதிரியார் அவர்கள். நான் விடைபெறும் நேரத்தில் என்னிடம் ஒரு கடித உறையையும் தந்தார். புகையிரதத்தில் ஏறியதும் அந்த உறையைப் பிரித்தேன். அதனுள் அழகான ஒரு நன்றி மடலும் அதனுள் 100 சுவிஸ் பிராங்கும் இருந்தது. உடனேயே அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் எனது ஆத்ம திருப்திக்காகவே இந்நிகழ்வை மேற்கொண்டேன் நான் பணத்தை எதிர்பார்க்கவில்லையே! என்றேன். அதற்கு அவர் நீர் பயணித்த செலவு மற்றும் உமது நேரம் உமது உடல் வலுவுக்கான ஒரு சிறு தொகையே இது என்று சொன்னார்.பொது சேவையாயிருந்தாலும் மனித வலுவுக்கு எமது நாடுகளைப் போலல்லாமல் ஒரு ஊதியத் தொகையை இங்கு கட்டாயமாக வழங்கி வருவது குறிப்பிடத் தக்கது. 

முதல் அனுபவத்தைப் பற்றி நான் தேவாரம் பாடிய அந்தப் பெரிய தேவாலயத்தின் பாதிரியார் வணக்கத்திற்குரிய றேரோ முல்லர்(Reto Müller)அவர்களுக்கு ஈமெயிலில் ஒரு செய்தி அனுப்பியிருந்தேன். அவர் என்னைச் சந்தித்துப் பேச ஒரு நாளை அவரது அலுவலகத்தில் ஒதுக்கியிருந்தார். நானும் அவருடன் சுமார் 40 நிமிடங்கள் வரை மனம்விட்டுக் கதைத்துவிட்டு விடைபெறும் சமயம் என்னை ஆசீர்வாதம் செய்யும்படி கேட்டேன் - அவர் ஆசீர்வதித்தார். முடிந்ததும் நான் புறப்பட்ட சமயம் எனது கையைப்பிடித்து தான் என்னிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நான் சொன்னேன் - நான் எமது சமயத்தின் தலைவரல்ல - உங்களுக்கு ஆசீர்வாதம் செய்யும் தகுதி எனக்கு இல்லை என்றேன்! அதற்கு அவர் உமது மனம் தூய்மையானது என்னை நீர் வாழ்த்த முடியும் என்றார். திருமுறைப் பாடல் ஒன்றை இசைத்து அவரது சிரசில் என் இருகைகளை வைத்து வாழ்த்துத் தெரிவித்தேன். இது என் வாழ்வில் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு அனுபவமாகும்.

3ஆவது தடவையாக 

இதன் பிறகு ஓரிரு மாதங்களின் முன்னர் முன்னைய கட்டுரையில் குறிப்பிட்ட இராஜன் அண்ணனுடைய தாயார் வவுனியாவில் மரணித்தார். அதற்காக ஒரு ஆத்ம சாந்திப் பிரார்த்தனையை அவர் தமது தேவாலயத்தில் ஒழுங்கு செய்திருந்தார். இதற்கு ஒழுங்குகளை அவர் மேற்கொண்டபோது பாதிரியார் அவர்களே இராஜன் அண்ணனிடம் முகுந்தனையும் ஒரு பாடல் பாட வைக்கலாம் தானே! என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். இராஜன் அண்ணரும் என்னுடன் தொடர்பு கொண்டு என்ன உம்முடைய பாடலில் பாதிரியாருக்கு ஒரு ஆசை உம்மை ஏதாவது பாடட்டாம் என்று சொன்னார். மேலும் பாடும் பாடலின் அர்த்தத்தை முன்கூட்டியே தனக்குத் தரும்படியும் அவர் கேட்டதாகச் சொன்னார் - நானும் ஆத்ம சாந்திக்காக கொழும்பில் என்னைக் கவர்ந்த அருளொளி நிலையத்தின் ஜோதிப் பாடலை அவருக்குப் பிரதிபண்ணிக் கொடுத்தேன். அவர் அதை மொழிபெயர்ப்புச் செய்து கொடுத்தார். குறிப்பிட்ட நாளில் நிகழ்வு இடம்பெற்றது.பாடலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட வணக்கத்திற்குரிய பாதிரியார் அவர்கள் எல்லாம் நிறைவு பெற்ற பின்னர் வருகைதந்த அனைவரையும் தேவாலயத்தில் மெழுகுதிரிகளை ஏற்றச் செய்துவிட்டு - இராஜன் அண்ணனின் தாயாருடைய ஆத்மசாந்திக்கும் - தற்போது ஈழத்தில் நடைபெறும் யுத்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கும் - நாட்டில் சாந்தி கிடைக்கவும் இப்போது பிரார்த்தனை நடைபெறும் என்று சொல்லி என்னை அழைத்தது உண்மையிலேயே என்னை ஓர் கணம் நெகிழவைத்தது. சமய தத்துவங்களை அறிந்தவன் என்ற வகையில் அவரது வேற்றுமை கடந்த செயற்பாடுகள் என்னால் மறக்க முடியாத ஒரு ஆனந்த அனுபூதியாகும்.

Note - இந்தப் பதிவிலுள்ள படங்கள் யாவும் சுவிஸ் நாட்டின் படங்களே! முன்னைய பதிவிலுள்ளவை எமது மாவட்டத்திலுள்ள படங்கள்!

மன்னாரில் நடந்த சம்பவம் மனதை மிகவும் சஞ்சலப்படுத்தியது! மனிதம் கொண்டவர்கள் நாட்டிற்குத் தேவை! இங்கே இருக்கிறார்கள் பலர் – அவர்கள் முன்வந்து சமுதாயத்துக்கு நல்வழிகாட்டவேண்டும்!

யாழ்ப்பாணத்தில் நாம் 2005இறுதிப்பகுதியில் வெண்புறா நிறுவனத்தில் பணியாற்றியபோது எமக்கு சில பயிற்சி வகுப்புக்களை நடாத்தியவர்களுள் கிறீஸ்தவ பாதிரியார்களும் இருந்தார்கள்! அவர்களில் முக்கியமானவர் வண. பிதா. ஸ்ராலின் அவர்கள். எம்மீது மிகுந்த அன்பை வைத்திருக்கிறார்கள்!

தன்னைப் போலச் சகலமும் ஓம்புக கண்ணைப் போலக் காக்க அறத்தை விண்ணைப் போல வியாபகமாகுக என்று நமது யாழ்ப்பாணத்துச் சித்தர் சிவயோக சுவாமிகள் கூறியபடி மனங்களில் பரந்த எண்ணமுடையவர்கள்தான் இன்று இந்நாட்டிற்குத்தேவை! சமயங்கள் மனிதனை மனிதனாக்கவே ஏற்படுத்தப்பட்டனவேயன்றி - மிருகமாக்குவதற்கு அல்ல! உண்மையைத் தேடும் பலருக்கு நமது சைவசமயம் வழிகாட்டுதல்களை விபரமாகத் தெரிவிக்கிறது!

யாழ்ப்பாண பொது நூலகம் 1981 ஜுன் முதலாந்திகதி எரிக்கப்பட்ட வேளையில் மாரடைப்பால் உயிர்நீத்த வண.பிதா. தாவீது அடிகள் 33 மொழிகளைப் பயின்றபெரிய வழிகாட்டி! அவர் சமயம் சார்ந்து பல பணிகளைச் செய்தாலும் அவரது நூல்கள் மனிதம் பற்றிப் பேசுபவை! அவரது நினைவு நாளுக்கு தும்பளை சென்று அஞ்சலி செலுத்திவருவது வழமை! ஒரு சில அது சைவர்களாயினும் சரி ஏனைய சமயத்தவராயினும் சரி மனிதப் பண்பை வளர்த்துக் கொள்ள  வேண்டும்! கீழ்நிலையிலிருந்து அறிவை ஆராய்ந்து மனிதனாக மிளிரவும் இதற்கப்பால் தன்னலம் கருதாமல் தேவ நிலையை அடைவதையே சமயங்கள் தமது தத்துவங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றன! கிணற்றுத் தவளைகளாக இருக்கும் ஒரு சிலரால் புனிதமான மார்க்கங்கள் தடையாக இருக்க மாட்டாது!

எதிர்வரும் 16ஆந்திகதி சைவசித்தாந்த திருச்சபையை அமெரிக்க ஹவாய் நாட்டில் ஆரம்பித்த யாழ்ப்பாணத்து சிவயோக சுவாமிகளின் சீடராகிய றொபேட் ஹன்சன் என்ற துறவி ஸ்ரீ  சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் சீடரான  சற்குரு ஸ்ரீ வேலன் சுவாமிகள் வர இருக்கும் சமயத்தில் இப்படியான தேவையற்ற சம்பவங்களை தவிர்ககுமாறு சம்பந்தப்பட்டவர்களை வேண்டுவதோடு அமைதியைக் கடைப்பிடித்து வாழ்க்கையை முன்னேற்ற போதிக்கும் சமயங்களின் உண்மையான கருத்துக்களை தெளிவாக அறிந்து வாழ வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுவதோடு இந்தச் சம்பவங்களால் குளிர்காய நினைக்கும் அதர்மக்காரர்களுக்கு இறைவன் கடும் தண்டனை அளிப்பான எனவும் கூறி எனது இக்கருத்தை நிறைவு செய்கின்றேன்!

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமன் இல்லை!

தங்க. முகுந்தன் (குருஸ்வாமி – சபரி ஸ்ரீ ஐயப்பன் யாத்திரைக் குழு)

(முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினர் - )