Jul 02

சிரிய அகதிகள் உள்வாங்குகையை தனது “டுவிட்டர்” (Twitter) பக்கத்தில் தாக்கிய பழமைவாதக் கட்சி அரசியல்வாதி

பழமைவாதக் கட்சி நாடாளுமன்ற உறுபினரான Kellie Leitch அவர்கள் லிபரல் அரசின் சிரிய அகதிகள் உள்வாங்கும் திட்டத்தைத் தனது “டுவிட்டர்” (Twitter) பக்கத்தில் தாக்கிக் கருத்து வெளியிட்டமைக்காக பலத்த கண்டனக்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அண்மையில் நியூ புறுண்ஸ்விக் மாகாணத்தில் உள்ள பெரெட்ரிக்டன் என்ற நகரில் சிரிய அகதிக் குடும்பம் ஒன்றில் மனைவியை மூர்க்கத்தனமாக ஹொக்கி மட்டையால் தாக்கியமைக்காக மொஹமட் ராபியா என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டார். இவரும் இவரது குடும்பமும் 14 மாதங்களுக்கு முன்னதாக லிபரல் அரசின் சிரிய அகதிகளை உள்வாங்கும் திட்டத்தின் கீழ் கனடாவிற்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.

நீதிமன்ற விசாரணையின் போது மனைவியை அடிப்பது கனடாவில் குற்றம் என்று தனக்குத் தெரியாது என அவர் கூறியிருந்தார். ஆயினும் நீதிமன்றால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

“அடித்து நொருக்கப்பட்ட ஒரு மனைவி, இரத்தக் கறை படிந்த ஒரு  ஹொக்கி மட்டை,  ஆகியவற்றையே ரூடோ அரசின் சிரிய அகதிகளை உள்வாங்கும் திட்டம்,  விட்டுச் சென்றுள்ளது” என ட்வீட் (tweet) செய்திருந்தார். இது பலத்த கண்டனங்களைத் தோற்றுவித்திருந்தது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த குடிவரவு அமைச்சர் அஹமட் ஹூசேன் “ வீட்டு வன்முறை எவ்வளவு தூரம் இழிவானதோ, Kellie Leitch அவர்களின் கருத்தும் அதே அளவு இழிவானதாகும் எனத் தெரிவித்தார்.