Mar 22

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்; பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்  என்று  பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அக் கடிதத்தில் உள்ளதாவது, 

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இருந்து ஒரு எந்திரப் படகில் மீன்பிடிக்கச்சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்றுமுன்தினம் 21 ஆம் திகதி  கைது செய்து இலங்கை காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றுள்ளனர் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

கடந்த 6ஆம் திகதி நடந்த துப்பாக்கி சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டும் மற்றொருவர் காயமடைந்தும் உள்ள குறுகிய காலத்தில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடந்து முடிந்த நிலையில் 85 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுவித்தனர்.

தற்போது தமிழக மீனவர்களை அவர்கள் கைது செய்துள்ளனர். இது இந்த பிரச்சினையை தீர்த்துவைப்பதற்காக இரண்டு நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ராஜ்ய ரீதியான நடவடிக்கைகளை அவமதிப்பதுபோல் காணப்படுகிறது. தீர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை தகர்ப்பதற்காகவே, பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து துன்புறுத்துவதாக தெரிகிறது.

பிடிபட்ட படகுகளை விடுவிக்காமல் இருக்கும் இலங்கை அரசின் செயல்பாடு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தமிழக மீனவர்கள் இடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக கவனிக்கப்படாமல் கிடப்பில் இருக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 தமிழக மீனவர்களையும்  129 மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிப்பதற்கு இராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளியுறவுத்துறைக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் என்றுள்ளது.