Jul 01

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் பிரிட்டிஷ் எயார்வேஸ் பணியாளர்கள்

ஊதியக் கொடுப்பனவு தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான சேவை பணியாளர்கள் 16 நாட்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்துள்ள நிலையில், இதனால் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்க சுமார் ஒன்பது கட்டார் எயார்வேஸ் விமான சேவைகள் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் எயார்வேஸ் பணியாளர்களின் ஊதியம் குறித்து கருத்து தெரிவித்துள்ள யுனைட் த யூனியன் (Unite the Union) தொழிற்சங்கம், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத் தொகை குறைவான நிலையிலேயே உள்ளது என தெரிவித்துள்ளது.

வருடாந்தம், சுமார் 16000 பவுண்களையே குறித்த பணியாளர்கள் பெறுவதாகவும் மேற்படி தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ஊதியத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து கடந்த வருடம் முதல் பிரிட்டிஷ் எயார்வேஸ் பணியாளர்கள் இது போன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.