Jul 01

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆட்சி மாற்றம்!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஆளும் கட்சி தோற்கடிக்கப்பட்டு, அங்கு புதிய ஆட்சி அமைவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பிய சட்டமன்றத்தில் ஆளும் லிபரல் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றுள்ள நிலையிலேயே, லிபரல் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற தேர்தலின் பின்னர், ஓரிரு வாரங்களுக்கு முன்னரே லிபரல் அரசாங்கம் மீண்டும் பதவியில் அமர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் நேற்று நடாத்தப்பட்ட இந்த நம்பிக்கையிலா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பினால், லிபரல் அரசு தோற்கடிக்கப்பட்டதனை அடுத்து, பிரிட்டிஷ் கொலம்பிய மாநில அரசினை அமைக்குமாறு புதிய சனநாயக கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் ஏற்பட்டுள்ள தோல்வியினை அடுத்து, கடந்த 16 ஆண்டுகளாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஆளும் கட்சியாக இருந்த லிபரல் கட்சி, முதற்தடவையாக எதிர்க்கட்சி வரிசை ஆசனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடந்து முடிந்த பிரிட்டிஷ் கொலம்பிய மாநில தேர்தலில், 87 ஆசனங்களைக் கொண்ட சட்டமன்றுக்கு, லிபரல் கட்சி 43 ஆசனங்களையும், புதிய சனநாயக கட்சி 41 ஆசனங்களையும், பசுமைக் கட்சி 3 ஆசனங்களையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஆசனங்கள் இல்லாவிடினும், அதிக ஆசனங்களை பெற்ற கட்சி என்ற வகையில் லிபரல் கட்சி ஆட்சி அமைத்திருந்த நிலையில், பசுமைக் கட்சியுடன் இணைந்து 44 ஆசனங்கள் என்ற நிலையை ஏற்படுத்திக்கொண்ட புதிய சனநாயக கட்சி, தற்போது லிபரல் கட்சியை நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் தோற்கடித்துள்ளது.

நேற்றைய நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் 44 க்கு 42 என்ற வாக்கு எண்ணிக்கையில் லிபரல் கட்சி தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, புதிய சனநாயக கட்சியை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.