Feb 25

மறப்போம் மன்னிப்போம் ரணிலும் கூட்டமைப்பும் -யதீந்திரா


அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, நாட்டின் பிரதமரும் கூட்டமைப்பின் நண்பருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த சில அபிப்பிராயங்கள் அரசியல் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. போர்க்குற்றங்கள் தொடர்பில் பேச முற்பட்டால் இரண்டு பக்கத்திலுமுள்ள குற்றங்கள் தொடர்பில் பேச வேண்டிவரும். மாறி மாறி வழக்குகளைத்தான் போட்டுக் கொண்டிருக்க நேரிடும் எனவே அனைத்தையும் மறப்போம் மன்னிப்போம் என்று தெரிவித்திருக்கும் ரணில், இருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்த முடியாதவர்களுக்கு இன்னும் ஏன் அதிகாரங்கள் என்றும் தெரிவித்திருக்கின்றார்.  ரணிலின் இவ்வாறான கருத்துக்கள் நமக்கு ஆச்சரியமளிக்கக் கூடியவை அல்ல ஆனால் கூட்டமைப்பின் மூளையாக செயற்பட்டுவரும் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனையும், தன்னை பிரபாகரனின் விசுவாசியாக காண்பித்துக் கொள்ளும் கிளிநெச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனையும் மேடையில் வைத்துக் கொண்டே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்திருப்பதை ஒரு வேளை சிலர் ஆச்சரியமான ஒன்றாகப் பார்த்திருக்கலாம். ரணில் அவ்வாறுதான் கூறுவார். இதற்கு முன்னரும் கூட, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தெரிவித்திருந்தார். வழமைபோல்  நமது அரசியல் வாதிகள் தங்களுடைய தெரு முனை சத்தங்களை எழுப்பினர். அவ்வாறு தெருமுனை சத்தங்களை எழுப்புவதில் மிகவும் வல்லவர் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன். இவரது சில அதிரடியான அரசியல் சித்து விளையாட்டுக்களை பார்க்கும் போது கோடாம்பாக்க நடிகர்களின் சினிமா வசனங்கள் கூட சில வேளைகளில் தோற்றுவிடும். அந்தளவிற்கு இவர் ஒரு புறம் விடுதலைப் புலிகளின் விசுவாசியாக தன்னை காண்பித்துக் கொண்மே அரசாங்கத்தின் ஏவலுக்கு பாய்ந்தோடும் ஒருவராகவும் செயற்படவல்லவர். கிளிநொச்சி மேடைகளில் அரசாங்கத்தை எதிர்ப்பார். பின்னர் நாடாளுமன்றத்தில் சுமந்திரனின் அரசாங்க ஆதரவு முன்மொழிவுகள் அனைத்துக்கும் வாய்மூடி ஆதரவளிப்பார். ரணிலுக்கு எதிராக பேசுவார் பின்னர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணிலை ஆதரித்து வாக்களிப்பார். இப்படிப்பட்ட ஒருவரது முகத்திரையைத்தான் ரணில் தற்போது கிழித்து தொங்கவிட்டிருக்கிறார். ஆனாலும் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் சிறிதரன் ஏதோ சில தெரு முனைக் கதைகளை சொல்லிவருகிறார். 

ரணில் உண்மையில் கிளிநொச்சியில் வைத்து கூறியது என்ன? அவர் எவ்வாறானதொரு அரசியல் நிகழ்ச்சிநிரலை முன்வைத்து அந்த உரையை நிகழ்த்தியிருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால், ரணில் இறுதி யுத்தத்தில் நடந்தவற்றை மறபோம் என்று கூறியது போன்றுதான் தெரியும். ரணில் அதனைத்தான் உண்மையில் கூறியுமிருந்தார். ஆனால் உண்மையில் கூற முற்படுவது வேறு – அதாவது, போர்க்குற்றங்களை மறந்துவிடுங்கள் என்று கூறுவதன் ஊடாக ரணில் உண்மையில் கூறுவது தமிழர்கள் உங்களின் வழமையான அரசியல் கோரிக்கைகளை கைவிடுங்கள். அது இனி இலங்கைக்கு பொருந்தாது. 

மைத்திரி – மகிந்த தரப்பினர் காட்டமாக கூறும் விடயத்தைதான், ரணில் மிகவும் மென்மையாக கூறுகின்றார். மகிந்த தரப்பு சிங்கள தேசியவாதத்தின் கடும்போக்கான முகம் என்றால் ரணில் தரப்பு அதன் தாராளவாத முகம். ஆனால் சிங்கள தேசியவாதிகளும், சிங்கள தாராளவாதிகளும் இறுதி யுத்தம் தொடர்பான மீறல்கள் என்று வரும்போது ஓரிடத்தில்தான் சந்திக்கின்றனர். கோத்தபாய போன்றவர்களிடம் கேட்டால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று எவரும் கிடையாது என்பார். மைத்திரியும் அவ்வாறானதொரு குரலில்தான் பேசிவருகின்றார். அதையே ரணிலிடம் கேட்டால் அவ்வாறானவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்பார். இங்கு கேள்வி அவர்கள் உயிரோடு இல்லையென்றால் அவர்களுக்கு நடந்த அனீதிக்கான நீதி என்ன என்பதுதான். ஆனால் அதனைத்தான் ரணில் தனக்கேயுரித்தான தாராளவாத முகத்துடன் மறப்போம் மன்னிப்போம் என்கிறார். விடுதலைப் புலிகள் என்னும் பிரமாண்டமான அமைப்பை தோற்கடிப்பதற்கு தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்சவையே, கடிநாயாக்கி கட்டிப் போட்ட, சுமந்திரனால் இதனை எதிர்த்து பேச முடியாமல் இருப்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது? ரணில் என்றவுடன் சுமந்திரன் உள்ளடங்கலான கூட்டமைப்பின் தலைவர்கள் ஏன் அஞ்சி ஓடுகின்றனர். மகிந்தவை விடவும் ரணில் ஆபத்தானவரா? 

2009இல் யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் தமிழர்களிடம் இருந்த ஒரேயொரு பலம் இறுதிப் போரின் போது, நிகழ்ந்ததாக சொல்லப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மட்டும்தான். அதாவது, எந்த யுத்தம் தோற்கடிக்கப்பட்டதோ அதே யுத்தத்தின் விளைவுகளை வைத்துத்தான் அடுத்த கட்ட அரசியலை செய்ய வேண்டிய நிலைமை தமிழர் தரப்பிற்கு ஏற்பட்டது. ஒரு பலமற்ற ஆதரவற்ற இனத்திற்கு முன்னால் அது ஒன்றுதான் தெரிவாகவும் இருக்க முடியும். தற்போது அதனைத்தான் ரணில் வைவிடுமாறு கூறுகின்றார். அதனை மறந்து ஓருவரை ஒருவர் மன்னித்துக் கொள்வோம் என்கிறார். மறப்பதும் மன்னிப்பதும் ஒரு பிரச்சினையில்லை. மனிதர்கள் தங்களின் கடந்தகாலங்களில் மட்டும் வாழந்துவிட முடியாது. கடந்காலம் என்பதை ஒரு உசைத்துணையாகக்  கொண்டு எதிர்காலத்தை நோக்கிச் செல்வதில்தான் மனித குலத்தின் வெற்றி தங்கியிருக்கிறது. அதெல்லாம் சரிதான் ஆனால் தமிழர்கள் தங்களின் கடந்த காலத்தை மறந்து செல்வதற்கு ஏற்றவாறு இதுவரை என்ன விடயங்கள் இத்தீவில் நடந்திருக்கின்றது? 

 கடந்த நான்கு வருடங்களாக பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன. ஆனால் எதுவுமே நடைமுறையில் வெற்றிகாணவில்லை. இவ்வாறானதொரு சூழலில், மறப்போம் மன்னிப்போம் என்பது தமிழர்கள் தங்களின் அரசியல் கோரிக்கைகள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு, அரசாங்கத்தின் அங்கமாகுங்கள். முஸ்லிம் காங்கிரஸ் போன்று அமைச்சரவையில் இடம்பெறுங்கள். இப்போது வெளியில் நின்று அனுபவிக்கும் சலுகைகளை உள்ளுக்குள் வந்தால் இன்னும் அதிகமாக அனுபவிக்கலாம் - இதுதான் ரணிலின் கிளிநொச்சி உரையின் சாராம்சம். புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்ட நிலையில்தான் அதனை சமாளிக்கும் நோக்கில், ரணிலின் மற்றைய விடயத்தையும் கூறியிருக்கிறார். இருக்கின்ற அதிகாரங்களையே பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கு எதற்கு புதிய அதிகாரம் என்று குறிப்பிட்டிருக்கின்றார். வடக்கு மாகாணசபையை விக்கினேஸ்வரன் சரியாக பயன்படுத்தவில்லை என்னும் சுமந்திரனின் குற்றச்சாட்டிற்கு ரணில் நற்சாண்றிதழ் வழங்கியிருக்கிறார். போர்க் குற்றங்களை மறந்துவிடுங்கள் என்னும் ரணிலின் கூற்றுக்கும் இருக்கின்ற அதிகாரங்களையே பயன்படுத்தத் தெரியாதவர்கள் என்னும் கூற்றுக்கும் இடையில் ஒரு நேரடித் தொடர்புண்டு. அண்மைக்காலமாக போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் விக்கினேஸ்வரனே ஆணித்தரமாக பேசிவருகின்றார். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் ரணில், மேற்படி கருத்தை குறிப்பிட்டிருக்கின்றார். அதாவது, போர்க்குற்றங்களை வலியுறுத்திக் கொண்டு அரசாங்கத்துடன் சமூகமாக செயலாற்ற முடியாது. அரசாங்கத்துடன் நீங்கள் இணைந்து நன்மைகளை பெற வேண்டுமாயின் போர்க்குற்றங்களை கைவிட வேண்டும் அதாவது மறக்க வேண்டும். இதன் மூலம் தமிழ் மக்கள் விக்கினேஸ்வரனை போன்றவர்களை ஆதரிக்க கூடாது என்றும் ரணில் மறைமுகமாக கூறியிருக்கிறார்.

போர்க்குற்றங்களை மறக்கலாமா? அது சரியானதொரு அரசியல் பாதையை தமிழ் மக்களுக்கு காண்பிக்குமா? இன்றைய நிலையில் இறுதி யுத்தத்தின் விளைவுகளை கைவிடுவது என்பது தமிழர்கள் தங்களின் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலான அரசியல் கோரிக்கைகளை முற்றிலும் கைவிடுவதற்கு சமனாகும். அது ஒரு அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது. அந்த விடயங்களை தமிழர் தரப்பு வலியுறுத்திக் கொண்ருக்கும் வரையில்தான், தமிழர் பிரச்சினை மறக்கப்படாமல் இருக்கும். ஒரு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும் படச்சத்தில் மன்னிப்பது என்பது வேறு விடயம். தென்னாபிரிக்காவில் அவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மன்னிப்பு தொடர்பில் சிந்திக்கப்பட்டது. ஆனால் இலங்கையின் அரசியல் நிலைமை முற்றிலும் தலை கீழானது. இவ்வாறானதொரு சூழலில் கடந்த காலத்தை கைவிட்டு அரசியல் செய்யலாம் என்று எண்ணுவது அடிப்படையிலேயே தவறான ஒரு புரிதலாகவே அமையும். 

ரணிலின் கூற்று தொடர்பில் கூட்டமைப்பு அமைதியாக இருப்பதை விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் அந்தளவிற்கு கூட்டமைப்பு ரணிலிடம் கடன்பட்டுவிட்டது. கடன் கொடுத்தவர்களுக்கு கடன் பெற்றவர்கள் அஞ்சித்தானே ஆக வேண்டும். ரணிலின் மேற்படி உரைக்கு மறுதினம் - எங்களின் பக்கத்தில் இழைக்கப்பட்ட தவறுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று சுமந்திரன் கூறியதாக செய்தி ஒன்றை காணமுடிந்தது. எங்களின் பக்கத்தில் தவறுகள் இருந்தால் அதனை விசாரணையில் நிருபிக்கலாம். அது ஒரு பிரச்சினையில்லை ஆனால் வடக்கு மக்கள் சுமந்திரனை, நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது எங்களின் பக்கத் தவறுகள் பற்றி பேசுவதற்கல்ல. சுமந்திரன் போட்டியிட்ட நாடாளுமன்ற தேர்தல் விஞஞாபனத்தில் அப்படியான வாக்குறுதிகள் எதுவுமில்லை.