Jul 01

“கனடா டே”: ரொரன்ரொவில் பாதுகாப்புகள் தீவிரம்

“கனடா டே” கொண்டாட்டங்களை முன்னிட்டு ரொரன்ரோவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மக்களின் பாதுகாப்பு என்பதே இந்த நிகழ்வின்போது தமது முதன்மையான குறிக்கோளாக உள்ளதாகவும் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.

கனடாவின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரொரன்ரொவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் காவல்த்துறை தலைமை அதிகாரி மற்றும் மேலும் சில மூத்த அதிகாரிகளால் கடந்த வாரம் தனக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும், அவர்களால் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தமக்கு திருப்திகரமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மக்களிடம் கூறமுடியாது என்ற போதிலும், பாதுகாப்பு ஏற்பாடுக்ள திருப்திகரமாக உள்ளன என்பதனை தன்னால் கூறமுடியும் எனவும், ரொரன்ரோ மக்கள் பாதுகாக்கப்படுவார்க்ள என்பதனை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இவ்வாறான பாரிய நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட்டு செயற்படுத்துவதில் தமக்கு போதிய அனுபவம் உள்ளதாகவும், நகருக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படுகிறதா என்பது 24 மணிநேரமும் இடைவிடாது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமது அதிகாரிகள் 24 மணிநேரமும் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், உள்ளூர், மாநில, தேசிய அளவிலான புலனாய்வுத்துறையினர் மட்டுமின்றி, அனைத்துலக அளவிலான புலனாய்வுக் கட்டமைப்புகளுடனும் தாம் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர்கள் விபரித்து்ளளனர்.

அந்த வகையில் அனைத்துவித புலனாய்வுத் தகவல்களும் தமக்கு உடனுக்குடன் கிடைக்கும் எனவும், அவற்றுக்கு ஏற்றவகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாற்றியமைத்து செயற்படுத்துவதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.