Jun 30

ரொரன்ரோ கடற்கரை மேம்பாடு: 1500 பேருக்கு வேலை வாய்ப்பு

சுமார் 1.2 பில்லிய்ன டொலர்கள் செலவில், ரொரன்ரோவுடனான கடல் முகப்பு பகுதிகளை மேம்படுத்தி பாதுகாக்கும் திட்டத்தினை பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார்.

நேற்று குறித்த கடற்பரை பகுதியில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து, பிரதம்ர் ஜஸடின் ரூடோ, ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி ஆகியோர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில தசாப்தங்களாக உலக அளவில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகாரிப்பானது, பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்குகளை அதிகரித்துள்ளதனை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், ரொரன்ரோ கரையோரத்தினை ஒட்டிய 240 ஹெக்டர் நிலப்பரப்பு இந்த புதிய திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதன் போது “டொன்” ஆற்றுக்கான இயற்கையான முகப்பு அமைக்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட நிலப்பரப்புகளின் மண் வளங்கள் சுத்தம் செய்யப்படும் எனவும், பயன்படுத்தப்படாதிருக்கும் தொழிற்சாலை நிலப்பரப்புகள் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் என்றும் அவர் விபரித்துள்ளார்.

இந்த திட்டத்தின் போது இயற்கையான சுற்றுச்சூழல் மீளக் கொண்டுவரப்படுவதானது, அங்கு இயல்பான ஈரநிலங்களை உருவாக்கும் என்பதுடன், அந்த சுற்றச்சூழலுக்கு உகந்த உயிரினங்களின் பரம்பல் அங்கு மீண்டும் அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன், இந்த சுத்திகரிப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் சுமார் 1,500 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டமானது, ஏற்கனவே வேறு பல கடற்கரைப் பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அவை வெற்றியளித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திட்டமானது, புதுப் பொலிவுடன் வசிப்பதற்கான ஒரு பிராந்தியத்தினை உருவாக்குவது மாத்திரமன்றி, பொருளாதார மற்றும் வேலை வாய்ப்பு வளர்ச்சிக்கான ஒரு மையமாக அமையயவுள்ளதுடன், பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படக்கூடிய ஒரு பகுதியையும் உருவாக்கவுள்ளதாகவும் அவர் விபரித்துள்ளார்.

கரையோரப் பகுதிகளை பச்சைக் காடுகளுடன் கூடிய இயற்கை வனப்பான பகுதியாக மாற்றும் 1.185 பில்லியன் டொலர்கள் செலவிலான இந்த நீண்டகாலத் திட்டத்திற்கு, மத்திய அரசாங்கம் 384 மில்லியன் டொலர்களையும், ஒன்ராறியோ மாநில அரசும், ரொரன்ரொ நகர நிர்வாகமும் தலா 400 மில்லியன் டொலர்களையும் பங்களிப்பு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.