Mar 22

கல்குடா மதுபானசாலைக்கு அனுமதியளித்தது யார்?; வியாழேந்திரன் எம்.பி கேள்வி

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பகுதியில் 450கோடி ரூபா செலவில் பாரிய மதுபான சாலையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. நல்லாட்சியில் வரிச்சலுகை அளிக்கப்பட்டு இந்த நிர்மாணத்திற்கு அனுமதி வழங்கியது யார்?  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கூட்டு எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியவர்,

மட்டக்களப்பில் ஏற்கனவே மதுபானசாலைகள் அளவுக்கு அதிகமாக காணப்படுகின்ற நிலையில் அவற்றை கட்டுப்படுத்தி மட்டக்களப்பு மதுவின் பிடியிலிருந்து மீட்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். 

அவ்வாறிருக்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கல்குடாவில் காணிகள் வழங்கப்பட்டு பாரிய மதுபானசாலையொன்று நிர்ணமானிக்கப்பட்டு வருகின்றது.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மருமகனுக்குச் சொந்தமானதாக கூறப்படும் இந்த நிர்மாணமத்திற்கு 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வரிச்சலுகையும் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. 

இவ்வாறான மதுபான உற்பத்திசாலையை இந்த பகுதியில் திறக்க வேண்டாமென மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும், கோரறைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிவிப்புக்களும் உரியவகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசேடமாக கோரளைப்பற்று பிரதேச செயலாளர் குறித்த நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு அறிவிப்பை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.இவற்றையெல்லாம் கடந்த அந்த நிர்மாணப்பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இதற்கு அனுமதியளித்தது யார்? நிதி அமைச்சின் கீழுள்ள கலால் திணைக்களம், மதுவரித் திணைக்களம் ஆகியவற்றின் அனுமதி இந்த மதுபானசாலை உற்பத்தி நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

வலுஇழந்து போயுள்ள தொழிற்சாலைகளை நாம் மீள இயக்குமாறு கோரும் நிலையிலும் அதற்குரிய உபாய மார்க்கங்களை ஆராய்கின்ற நிலையிலும் இவ்வாறான நிர்மாணப்பணியை உடன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் எடுக்கவேண்டும் என்றார்.