Jun 29

குற்றச்சாட்டுகளை எதிர்த்து போராட பாப்பரசரின் ஆலோசகருக்கு அனுமதி

பாப்பரசர் பிரான்சிஸின் ஆலோசகர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்த்து போராடும் வகையில் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல பாப்பரசர் அவருக்கு அனுமதியளித்துள்ளதாக வத்திக்கான் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாப்பரசரின் தலைமை நிதி ஆலோசகரான கர்த்தினால் ஜோர்ஜ் பெல் மீது அவுஸ்ரேலிய பொலிஸாரினால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால் இக்குற்றச்சாட்டை அவர் மறுத்திருந்த நிலையிலேயே பாப்பரசர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பொலிஸாரின் குற்றச்சாட்டையடுத்து கருத்து தெரிவித்த கர்த்தினால், இரண்டு ஆண்டு விசாரணைகளின் பின்னர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டானது இரக்கமற்ற படுகொலையை ஒத்ததாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன் மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் தனது பெயருக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், அதன்படி அவுஸ்ரேலியாவிற்கு சென்று இப்பிரச்சினைக்கு தீர்வுகண்டு பின்னர் மீண்டும் உரோம் திரும்புவதாகவும் தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் பேரில் கர்த்தினால் ஜோர்ஜ் பெல் கடந்த 2016ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.